இந்தியாவை 'சைபர் எதிரி' என்று முத்திரை குத்திய கனடா.. பதிலடி கொடுத்த இந்திய அதிகாரிகள்!
Nov 02, 2024, 10:38 PM IST
இந்தியாவை 'சைபர் எதிரி' என்று முத்திரை குத்திய கனடா.. பதிலடி கொடுத்த இந்திய அதிகாரிகள் குறித்துப் பார்க்கலாம்.
கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் இந்தியாவை 'சைபர் எதிரி' என்று விமர்சித்ததை அடுத்து, இந்தியாவின் வெளியுறவு அமைச்சக (எம்.இ.ஏ) செய்தித்தொடர்பாளர் கனடாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
சைபர் பாதுகாப்புக்கான கனட மையம் நவம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026இல் அந்த விளக்கம் செய்யப்பட்டது.
ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவுடன் சேர்த்து இந்தியாவை 'சைபர் எதிரி' என்று கனடா சமீபத்தில் வகைப்படுத்தியதை சுட்டிக்காட்டி, இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது இந்தியாவைத் தாக்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதுதொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, "இந்தியாவைத் தாக்குவதற்கான கனடாவின் வியூகத்திற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
இந்தியா மீது எந்தவொரு ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு:
நான் முன்பு குறிப்பிட்டது போல, இந்தியாவுக்கு எதிராக உலகளாவிய கருத்தை கையாள முயல்வதாக அவர்களின் மூத்த அதிகாரிகள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். மற்ற சந்தர்ப்பங்களைப் போலவே, குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாமல் வைக்கப்படுகின்றன" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
நடந்து கொண்டிருக்கும் கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சில இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கனேடிய அரசாங்கத்தால் சமீபத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்ஸ்வால் கூறினார்.
தொழில்நுட்ப அம்சங்களை மேற்கோள் காட்டி கனடா தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜ் ஜெய்ஸ்வால் விமர்சித்தார்.
அத்தகைய கனடாவின் நியாயப்படுத்தல்கள் இந்திய இராஜதந்திர அதிகாரிகளை துன்புறுத்துவது மற்றும் மிரட்டுவதை மன்னிக்கவே முடியாது என்று வாதிட்டார்.
அக்டோபர் 30ஆம் தேதி, வெளிநாட்டை தளமாகக் கொண்ட இணைய அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கும் கனேடிய சிக்னல்கள் புலனாய்வு நிறுவனம், உளவு நோக்கங்களுக்காக கனேடிய நெட்வொர்க்குகளுக்கு எதிராக இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நடத்தி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் ஏஜென்ஸியின் தலைவர் கரோலின் சேவியருக்கு அளித்த மேற்கோளில், "கனடாவும் இந்தியாவும் சில பதற்றங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால், கனேடியர்களுக்கு எதிரான இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை இந்தியா செய்திருப்பதாக நினைக்கிறோம்’’ என்றார்.
தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில் கனடா கூறியது என்ன?:
- உலகளாவிய அமைப்பிற்குள் புதிய அதிகார மையங்களாக மாற விரும்பும் இந்தியா போன்ற நாடுகள், கனடாவுக்கு மாறுபட்ட அளவிலான அச்சுறுத்தலை முன்வைக்கும் இணைய திட்டங்களை உருவாக்குகின்றன.
- இந்தியாவின் சைபர் திட்டம் அதன் செயல்பாடுகளை மேம்படுத்த வணிக இணைய விற்பனையாளர்களை மேம்படுத்தும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.
- உளவு நோக்கத்திற்காக ஆராயும்போது, இந்திய அரசு ஆதரவிலான சைபர் அச்சுறுத்தல் செயல்பாடுகள் கனேடிய அரசாங்க நெட்வொர்க்குகளுக்கு எதிராக, இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை இந்தியாவின் சைபர் துறை நடத்தக்கூடும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.
- கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அதிகாரப்பூர்வ இருதரப்பு உறவுகள் கனடாவுக்கு எதிரான இந்திய அரசின் ஆதரவிலான இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை இயக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலிஸ்தான் ஆதரவாளர்களை கனடா ஆதரித்ததாக இந்தியாவும், இந்தியா தீவிரவாதத்தை ஆதரிப்பதாக கனடாவும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொண்டன. இதனால், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை கனடாவில் இருந்து திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்