2024 Lok Sabha: நாடாளுமன்றத் தேர்தல்! ஸ்கெட்ச் போட நாளை கூடுகிறது செயற்குழு
Jan 15, 2023, 08:04 PM IST
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கவும், இந்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை
பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நாளை புதுதில்லியில் தொடங்குகிறது. தற்போது தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. 2024 லோக்சபா தேர்தல் முடியும் வரை அவர் கட்சியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளையதினம் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடிக்காக, படேல் சவுக் பகுதியில் இருந்து கூட்டம் நடக்கும் என்டிஎம்சி மையம் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, இந்த கூட்டத்தில் நாடு எதிர்கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஸ்கெட்ச்
அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும், மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள், பலவீனமான மக்களவைத் தொகுதிகளுக்கான பாஜகவின் ‘பிரவாஸ் யோஜனா’ மற்றும் பூத் அளவிலான அணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நடைபெறும் எனவும், ஒரு வகையில் இந்த கூட்டம் பாஜகவின் எதிர்கால நடவடிக்கையை இறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய செயற்குழுவிற்கு முன், கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில பிரிவு தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு செயலாளர்கள் கூட்டம் இங்குள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் .
பாஜக சாதனை விளக்க கண்காட்சி
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவை ஒட்டி, கட்சியின் சேவைப் பணிகள் உள்ளிட்ட 6 கருப்பொருள்களின் அடிப்படையில் மாபெரும் கண்காட்சி நடத்தப்படும் என்றும், இந்தியாவை ‘விஷ்வ குரு’வாகக் காண்பித்தல், ஆளுகைக்கு முதலிடம், தாழ்த்தப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான இந்தியாவை மேம்படுத்துதல் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல் மற்றும் உலகம் முழுவதும் சனாதன தர்மத்தின் எழுச்சி போன்ற பழமையான சின்னங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தாவ்டே கூறினார்.
டாபிக்ஸ்