Vendhaya Kali : உடல் சூட்டை தணிக்கும்.. கருப்பைக்கு வலுவூட்டும் வெந்தயக்களி.. இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!
Sep 14, 2024, 07:00 AM IST
Vendhaya Kali : வெந்தயத்தில் உள்ள டயாஜினின்சத்து கருப்பைக்கு வலுவூட்டும். அதுமட்டும் இல்லாமல் நம் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சீராக்கும். இந்த வெந்தயத்தில் பாரம்பரிய முறைப்படி களி செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.
Vendhaya Kali : நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தனர். இதனால் பெரும்பாலும் முதுமை காலத்திலும் திடகாத்திரமான உடலோடு எளிதில் நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று நாம் மாறி வரும் வாழ்க்கை சூழல் காரணமாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைவரும் ஆரோக்கியமற்ற உணவுகளையே தினமும் எடுத்து கொள்கிறோம். இதனால் 30 வயதை கடக்கும் போதே நமது உடலில் பிபி, சுகர் என்று பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதே நிலை நம் குழந்தைகளுக்கும் வராமல் இருக்க வேண்டும் என்றால் இப்போதிருந்தே ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு பழக்க வேண்டும். அப்படி ஒரு ஆரோக்கியமான உணவுதான் வெந்தயக்களி. வெந்தயத்தில் நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, டயாஜினின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். செரிமானம் துரிதமாக நடைபெறுவதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
குறிப்பாக புதிதாக வயதிற்கு வரும் பெண்களுக்கு வெந்தயம் மிகவும் நல்லது. வெந்தயத்தில் உள்ள டயாஜினின்சத்து கருப்பைக்கு வலுவூட்டும். அதுமட்டும் இல்லாமல் நம் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சீராக்கும். மேலும் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி வெந்தயத்தை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வெந்தயத்தில் பாரம்பரிய முறைப்படி களி செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.
வெந்தய களி செய்ய தேவையான பொருட்கள்
வெந்தயம் - 50 கிராம்
அரிசி - 200 கிராம்
கருப்பட்டி - 200 கிராம்
சுக்கு - சிறு துண்டு
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 1/4 கப்
வெந்தய களி செய்முறை
அரிசியை கழுவி 6 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதே போல் வெந்தயத்தையும் ஊற வைக்க வேண்டும்.
அரிசி, வெந்தயம் நன்றாக ஊறிய பிறகு அதை கிரைண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல் கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுக்க வேண்டும். கருப்பட்டி பாகை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அடி கனமான பாத்திரத்தில் அரைத்து எடுத்த வெந்தயம் அரிசி மாவை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். தொடர்ச்சியாக அடுப்பை குறைவான தீயில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அரிசி மாவு நன்றாக வெந்து கெட்டியாக ஆரம்பிக்கும் போது அதில் கருப்பட்டி பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கருப்பட்டி பாகுடன் களி நன்றாக வெந்த பிறகு அதில் நல்லெண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும். அதில் சுக்கை தட்டி சேர்க்க வேண்டும். சுக்கு சேர்ப்பதால் களி மணமாக இருக்கும். களி நன்றாக வேகும் வரை கட்டி படாமல் கிளறி விட வேண்டும். சட்டியில் ஒட்டாமல் களி வரும் போது அடுப்பை நிறுத்தி விடலாம். அவ்வளவுதான் சத்தான வெந்தயக்களி ரெடி.
இப்போது ஒரு தட்டில் களியை வைத்து அதில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு கொஞ்சம் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பரிமாறலாம். ருசி அருமையாக இருக்கும். புதிதாக வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுக்கு வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் செய்து கொடுப்பது மிகவும் நல்லது.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.