Vada Curry : இட்லி, தோசைக்கு செம்ம ஜோடி! சென்னை ஸ்பெஷல் வடகறி செய்வது எப்படி? பார்த்தாலே சுவைக்க தூண்டும்!
Jul 17, 2023, 09:40 AM IST
Vada Curry : தென் தமிழகத்தவிட, வட தமிழகத்தில் பிரதான உணவு, குறிப்பாக சென்னை மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்த உணவு என்றால், அது வடகறிதான். டிபன், சாதம் எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிட சுவை அள்ளும் வடகறி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
வடை செய்ய தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 3
சோம்பு – கால் ஸ்பூன்
இஞ்சி – அரை இஞ்ச்
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – அரை கப்
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
நன்றாக நறுக்கிய வெங்காயம் – 1
நன்றாக நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்ச மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
முழு கரம் மசாலா – 3 கிராம்பு, 1 பட்டை, 1 ஸ்டார் சோம்பு, 1 ஏலக்காய்
கறிவேப்பிறை – ஒரு கொத்து
எண்ணெய் – 2 ஸ்பூன்
மல்லித்தழை – கைப்பிடியளவு
செய்முறை
கடலை பருப்பை நன்றாக ஊறவைத்து, ஒன்றிரண்டாக, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம், சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக வடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
குட்டிகுட்டி உருண்டைகளாக்கி அதை, இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது எண்ணெயில் பொறித்து வைத்துக்கொள்ளலாம் அல்லது அவனில் வைத்து வேகவைத்துக்கொள்ளாலம்.
இந்த வடையை தயாரித்து தனியாக வைத்துவிடவேண்டும். (மீந்துபோன மசால் வடையிலும் இந்த வடகறியை செய்யலாம். ஆனால் அது கெட்டுப்போனதாக இருக்கக்கூடாது)
கிரேவி செய்வதற்கு, கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், சோம்பு, ழுமு கரம் மசாலா பொருட்கள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கிவிட்டு, அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்க்க வேண்டும். தக்காளிகள் நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும், எண்ணெயை பிரிவும் வரை வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் (தண்ணீருக்கு பதில் தேங்காய் பாலும் சேர்க்கலாம்)
இதில் வடையை சேர்க்க வேண்டும். வடையில் நன்றாக கிரேவி சேரும் வரை கொதிக்கவிடவேண்டும்.
உப்பு சரிபார்க்க வேண்டும். வடகறி நன்றாக கெட்டியாகும் வரை சமைத்து எடுத்து ஆறவிட்டால் தேவையான அளவு கெட்டித்தன்மை வந்துவிடும்.
கொத்தமல்லி இழைத்தூவி பரிமாறவும்.
வட தமிழகத்தில் இது ஒரு சிறப்பாக இட்லியுடன் இது செம்ம காம்போ, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்