தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மஞ்சள் நல்லதுதான்; ஆனால் கொஞ்சம் அதிகமானாலும் அச்சச்சோ இத்தனை ஆபத்துக்களா?

மஞ்சள் நல்லதுதான்; ஆனால் கொஞ்சம் அதிகமானாலும் அச்சச்சோ இத்தனை ஆபத்துக்களா?

Priyadarshini R HT Tamil

Nov 23, 2024, 10:54 AM IST

google News
நாம் அன்றாடம் சேர்க்கும் மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
நாம் அன்றாடம் சேர்க்கும் மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

நாம் அன்றாடம் சேர்க்கும் மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

மஞ்சள் உடலுக்கு நல்லது தரும் மூலிகையாகவும், உணவாகவும் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பாரம்பரிய மருத்துவம் மற்றும் அன்றாட சமையல் என பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆயுர்வேதத்தில் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள், மஞ்சளுக்கு அதன் நிறத்தைக்கொடுப்பது, பல்வேறு நன்மைகளை உடலுக்கு கொடுத்து வருகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதை உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கான காரணங்கள் இவை. ஆனால் நாம் வீட்டில் பொதுவாக மஞ்சளை உபயோகிக்கும்போது, கால் ஸ்பூன் வரைதான் பயன்படுத்துவோம். சாம்பார், ரசம், பொரியல், கிரேவி என எதில் சேர்த்தாலும் அதன் அளவு 4 முதல் 5 பேர் கொண்ட சமையலுக்கு கால் ஸ்பூன் மட்டும்தான். நிறத்துக்காக மட்டும்தான். அதை அதிகம் சேர்த்தால் என்னவாகும் பார்க்கலாமா?

ஆரோக்கியமான உணவின் அங்கமாக உள்ள மஞ்சள் ஆபத்தானதா?

ஆம். மஞ்சளில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், இதை அளவுக்கு மேல் உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

செரிமான கோளாறுகள்

மஞ்சள்தான் நம் உடலில் பித்த உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள ஆசிட் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரையில், அதிகம் மஞ்சள் சாப்பிட்டால் அது செரிமான நெருப்பை அதிகம் தூண்டிவிடும். இதனால் உங்கள் உடலில் சூடு அதிகரிக்கும். ஏற்கனவே சூட்டு உடல் வாகு கொண்டவர்களுக்கு இது நல்லதல்ல. சிலருத்து இது செரிமானத்தைக்கொடுக்கும். குறிப்பாக அவர்களின் கொழுப்பைக் குறைக்கும். எனினும், வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். செரிமான மண்டலத்தில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கேஸ்ட்ரோஈசோஃபாஜெல் ரிஃப்ளக்ஸ், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் மற்ற கேஸ்ட்ரோஇன்டஸ்டைனல் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்கள்

மஞ்சளில் ஆக்ஸலேட்கள் உள்ளது. இது பல்வேறு தாவர உணவுகளில் இயற்கையில் உருவாகும் உட்பொருள் ஆகும். இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் இதை அதிகம் உட்கொள்ளும்போது, ஆக்ஸலேட்கள் உங்கள் உடலில் உள்ள கால்சியத்துடன் பிணைந்து, கால்சியம் ஆக்ஸலேட் கிரிஸ்டல்களை உருவாக்குகிறது. இதுதான் சிறுநீரகத்தில் தோன்றும் பொதுவான கல் ஆகும்.

ரத்த உறைவு எதிர்ப்புத்திறன்

மஞ்சளில் ரத்த உறைவை எதிர்க்கும் திறன் அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடும்போது அது அறுவைசிகிச்சை செய்து ரத்த உறைவு எதிர்ப்பு மருந்துகள் உட்கொண்டு வருபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இரும்புச்சத்து குறைவு

மஞ்சள், குறிப்பாக அதில் உள்ள குர்குமின், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கும் திறன் கொண்டது. வேளாண் மற்றும் உணவு வேதியல் ஆய்விதழிலில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்று, மஞ்சளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதை அதிகம் சாப்பிடும்போது, அது உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் அளவைத் தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், உங்களுக்கு இரும்புச்சத்துக்கள் குறைபாடு மற்றும் அனீமியா ஏற்படும். நீண்ட காலம் உணவில் அதிகம் மஞ்சள் எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும்.

ரத்த அழுத்தம் குறைவு

மஞ்சளில் உள்ள முக்கிய உட்பொருளான குர்குமின், ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைகொண்டது. குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கு இது ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரச்னையை தூண்டி விடுகிறது.

தலைவலி மற்றும் மயக்கம்

அதிகளவில் குர்குமின் எடுத்துக்கொள்வது சிலருக்கு தலைவலி மற்றும் மயக்கதை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள இந்த உட்பொருள் சிலருக்கு இந்த உடனடி பக்கவிளைவை ஏற்படுத்திவிடும். பாரம்பரிய மருத்துவத்தின்படி, குர்குமினில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அது வீக்கத்துக்கு எதிரான குணம், ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பொருள் என எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடும்.

தினமும் ஒருவர் எவ்வளவு மஞ்சள் சாப்பிடலாம்?

தினமும் மஞ்சள் உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதை மிளகுடன் சேர்த்து சாப்பிடும்போது, அதில் உள்ள பைப்பரினும் உங்கள் உடலுக்கு கூடுதல் நன்மைகளைக் கொடுப்பதாக கூறுகிறது. 500 முதல் 2,000 மில்லிகிராம் வரை ஒரு நாளைக்கு ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி