TN Health Dept. : சுகாதாரத் துறையின் குறைகள் மற்றும் நிறைகள்! வாக்களிக்கும் முன் நாம் எதை தெரிந்துகொள்ள வேண்டும்?
Mar 30, 2024, 03:08 PM IST
TN Health Dept. : அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்தின் தரம் சரியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வழுவாக உள்ள நிலையில், மருந்தின் தரத்தை மக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் மருந்தின் தரத்தில் நிகழும் ஊழல்களைத் தடுக்க முடியும்.
இந்திய அளவில் தமிழக சுகாதாரத்துறை பல விசயங்களில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
கருவுற்ற தாய்மார்களின் இறப்பு விகிதம் 2023-24ல் தமிழகத்தில் 52 எனக் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில் அது நூற்றை தாண்டியுள்ள நிலையே உள்ளது.
குழந்தைகள் இறப்பு விகிதம் (உயிருடன் பிறந்த 1,000 குழந்தைகளில்) 2023ல் தமிழகத்தில் 8.2 எனக் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில் அது 26.6 என அதிகமாக உள்ளது.
இறந்தே குழந்தை பிறப்பது 2020ல் இந்தியாவில் 3 என்ற அளவில் இருக்க, தமிழகத்தில் அது 2 என உள்ளது.
மருத்துவ சுற்றுலா என எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு 15 லட்சம் நோயாளிகள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.
தமிழகத்தில் சராசரியாக 253 பேருக்கு 1 மருத்துவர் என உள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, 500 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்தால் போதுமானது.
தமிழகத்தில் சமுதாய மருத்துவ மையங்கள்-400,
ஆரம்ப சுகாதார மையங்கள் -1885,
துணை சுகாதார மையங்கள் - 8713 என்ற அளவில் இயங்கி வருகிறது.
இதுவரை 298 சுகாதார மையங்கள் தேசிய தரச்சான்று பெற்றுள்ளன.
நிறைகள் பல இருந்தாலும், குறைகளும் உள்ளன.
குறைகள்
70 சதவீதம் சுகாதாரச் சேவை தனியார் மூலம் தான் மேற்கொள்ளப்படுகிறது. இது அரசு மருத்துவமனைகளில் குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்தின் தரம் சரியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வழுவாக உள்ள நிலையில், மருந்தின் தரத்தை மக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் மருந்தின் தரத்தில் நிகழும் ஊழல்களைத் தடுக்க முடியும்.
ஆரம்ப கட்ட சிகிச்சைக்கு 70 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என இருந்தும், அது மிகக்குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. (முந்தைய சில ஆய்வுகளில் நகர்புறங்களுக்கு 90 சதவீதம் நிதியும், கிராமப்புறங்களுக்கு 10 சதவீத நிதியும் ஒதுக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன)
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரநிலையங்கள் 24 மணி நேரம் செயல்படுவதில்லை. மருத்துமனைகள் சில 24 மணி நேரம் செயல்பட்டாலும், மருத்துவர்கள் 24 மணி நேரம் இருப்பதில்லை. மருத்துவர்கள் 24 மணி நேரம் இருந்தாலும், தரமான மருந்துகள் அனைத்து நோய்களுக்கும் இருப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் IIT சென்னை ஆய்வில் துணை சுகாதார
மையங்களை மேம்படுத்தினால், மக்கள் அருகில் உள்ள அம்மையங்களுக்கு சென்று, சேவையை பயன்படுத்திக்கொண்டால் அரசிற்கு பணச்செலவு குறையும் என்றும், மக்கள் தன் சொந்த செலவில் சுகாதாரத்திற்கு செலவிடுவது குறையும் என்றும் தெளிவாகத் தெரியவந்த போதிலும், அரசு தினசரி இயங்க வாய்ப்புள்ள துணைசுகாதார மையங்களை மேம்படுத்தாமல் மாதம் ஒருமுறை மட்டுமே வெறும் மாத்திரைகளை மட்டுமே கொடுக்கும் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தை மட்டுமே ஊக்கப்படுத்துகிறது. துணை சுகாதார மையங்களை மேம்படுத்தினால் தினமும் சிகிச்சையளிக்க முடியும்.
மக்களின் பங்களிப்பின்றி மருத்துவத் திட்டங்களை செயல்படுத்த முனைவதும், எதிர்பார்த்த பலன்களைத் தராது. எனவே நிறைகள் இருந்தபோதிலும், இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. எனவே இவற்றையும் களைவதற்கு அரசு முன்வர வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்