ரத்த சோகையை அடித்து விரட்ட இந்த ஒரு சட்னியே போதும்! அதை எப்படி செய்வது என்று பாருங்கள்!
Oct 13, 2024, 02:40 PM IST
ரத்த சோகையை அடித்து விரட்ட இந்த ஒரு சட்னியே போதும். இதை பீட்ரூட்டில் செய்யவேண்டும். மேலும் பீட்ரூட் உங்களுக்கு உடலுக்குத் தரும் எண்ணற்ற நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
பீட்ரூட்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உங்கள் உணவில் தினமும் பீட்ரூட்டை சேர்ப்பதால் அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள எண்ணற்ற நன்மைகள் மற்றும் அதன் மொறுமொறுப்பான குணம், அதன் சிவப்பு வண்ணம் என அனைத்தும் அதை சாலட்டாகவும், பல்வேறு உணவுகளாகவும் எடுத்துக்கொள்ளத் தூண்டுகிறது. உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு ஏற்றது இந்த பீட்ரூட்கள். பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை நீங்கள் பார்த்தால், நீங்கள் தினமும் பீட்ரூட் எடுப்பதை தவிர்க்கமாட்டீர்கள். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் உங்கள் உடலுக்கு நல்லது.
நீங்கள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமுடனும் இருக்க அவை உதவுகின்றன. உங்கள் வாழ்வில் பீட்ரூட்டை சேர்ப்பதற்கான 6 முக்கிய காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள்
100 கிராம் வேகவைத்த பீட்ரூட்டில் 44 கலோரிகள், 1.7 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 2 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள்தான் இதை கலோரிகள் குறைந்த உணவாக மாற்றுகிறது. ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது.
வீக்கத்தை குறைக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை காக்கிறது.
மூளை ஆரோக்கியத்தைக் காக்கிறது.
பீட்ரூட்டை உங்கள் உணவில் சாலடாக, பொரியலாக, கூட்டாக, ஸ்மூத்தியாக, பழச்சாறாக, பூரி அல்லது சப்பாத்தி மாவில் சேர்த்து என எடுத்துக்கொள்ளலாம். பச்சையாகக்கூட சாப்பிடலாம். இந்த பீட்ரூட்டில் தற்போது பல்வேறு உணவுகள் தயாரித்து உட்கொள்ளப்படுகிறது. இதில் எப்படி சட்னி அரைத்து சாப்பிடலாம் எனப்பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
பச்சை மிளகாய் – 2
புதினா – ஒரு கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
பீட்ரூட், பச்சை மிளகாய், புதினா, உப்பு, எலுமிச்சை சாறு, சீரகம், மல்லித்தழை, தேங்காய் துருவல் என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவேண்டும். அதை ஒரு பவுலில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் அந்த தாளிப்பை சட்னியில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையில் பீட்ரூட் சட்னி தயார்.
பீட்ரூட்டை சாப்பிட தயங்கும் குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும்.
ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைப்பீர்கள். மேலும் பீட்ரூட் எண்ணற்ற நன்மைகளை வழங்கக் கூடியது என்பதால் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சட்னி சாப்பிடுவதை கட்டாயமாக்குங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள், தகவல்களை ஹெச்.டி. தமிழ் தினமும் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இதுபோன்ற தகவல்களை தொடர்ந்துபெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்