Piles Control Food : மூல நோயை சரிப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்
May 28, 2023, 06:04 PM IST
மூல நோயை சரிப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மூலநோய் மிகவும் வலி நிறைந்தது. இதனால் வேறு சில பிரச்னைகளும் ஆரம்பமாகலாம். இந்த நோய் பற்றிய அணுகுமுறை மாற வேண்டும். இதைப் பற்றி எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேச தொடங்க வேண்டும்.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் மூல நோயிலிருந்து விடுபட அல்லது அதன் தாக்கத்தை குறைக்க சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான சூர்யா மாணிக்கவேலிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
மூலநோய் ஏற்படுவதற்கான காரணம்-
மரபியல், கர்ப்பம், உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களினால் மூலநோய் ஏற்படலாம். அதிக காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மூல நோய்க்கு பயன் தரும் உணவுகள்-
முழு தானியங்கள்
மூல நோயின் தாக்கத்தை குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். முழு தானியங்களில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. பிரவுன் ரைஸ், கம்பு, ஓட்ஸ், பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் செரிமானத்துக்கு உதவும். மேலும் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் மூல நோயால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கலாம். இது போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்துடன் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கின்றன.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. அதே சமயம் இது போன்ற காய்கறிகளில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மூல நோயின் அசௌகரியத்தை குறைக்க ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முள்ளங்கி, டர்னிப் மற்றும் முட்டைக்கோஸ் சாப்பிடலாம்.
பழங்கள்
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன. மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் உள்ள பெக்டின் மற்றும் எதிர்ப்பு மாவு சத்து மூல நோய்க்கு மிகவும் நல்லது. பெக்டின் செரிமான மண்டலத்தில் ஜெல்லை உருவாக்குகிறது, அதே சமயம் மாவு சத்து குடல் பாக்டீரியாவுக்கு உணவளிக்கிறது. இந்த கலவை மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்-
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம். இந்த சமயத்தில் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். மேலும் மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டும். குறைந்த நார்ச்சத்து மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளையும் தவிர்க்க வேண்டும். தவறுதலாக கூட இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்-
மூல நோயை தடுத்திட உடல் எடையை சரியான வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்யவும்.
லேசான அதே சமயம் காரம் குறைவான உணவுகளை சாப்பிடவும்
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்க்கவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் மூல நோயிலிருந்து முழுவதுமாக விடுபடலாம்.
டாபிக்ஸ்