Tamil New Year Special : தமிழ் புத்தாண்டுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று! வேப்பம் பூ ரசம்! இதோ ரெசிபி!
Apr 07, 2024, 02:50 PM IST
Neem Flower Rasam : தமிழ் புத்தாண்டுக்கு அனைவர் வீடுகளிலும் கட்டாயம் செய்ய வேண்டியது வேப்பம்பூ ரசம். சாதாரண ரசத்தில் நெய்யில் வறுத்த வேப்பம்பூவை சேர்க்க வேண்டும் அல்லது பருப்பு தண்ணீர் சேர்க்காத ரசத்தில் வேப்பம்பூவை சேர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
உலர்ந்த வேப்பம் பூக்கள் – 2 ஸ்பூன்
புளிக்கரைசல் – ஒரு கப்
நெய் – அரை ஸ்பூன்
எண்ணெய் – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 6
கடுகு – கால் ஸ்பூன்
துவரம் பருப்பு – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
வெல்லம் – சிறிய துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் நெய்யை சூடாக்கி, வேப்பம்பூக்களை வறுத்துக்கொள்ள வேண்டும். அவை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். கருகிவிடாமல் கவனமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியாக வைத்துவிடவேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு தாளித்து பொரிந்தவுடன், வரமிளகாய் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பருப்பு நிறம் மாறியதும், புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, பெருங்காயத்தூள் என அனைத்தும் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
இது நுரை தட்டி வரவேண்டும். பின்னர் வெல்லத்தை சேர்த்து, அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த வேப்பம்பூவை சேர்க்க வேண்டும். வேப்பம்பூவை சேர்த்த பின்னர் ரசத்தை கொதிக்கவிடக்கூடாது. கசப்பு மொத்தமும் ரசத்தில் சேர்ந்து குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.
வேம்பின் நற்குணங்கள்
வேப்பம்பூக்களில் இயற்கையிலேயே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. உங்கள் உடலை இயற்கையான முறையில் சுத்திகரிக்கிறது. இந்த பூக்கள் மஞ்சள் – வெள்ளை நிறம் கொண்டவை. இது உட்கொள்வதற்கு உகந்தவை. இவற்றை காயவைத்து, சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
வேம்பு மருத்துவ குணங்கள் நிறைந்த மரம். இதன் இலை, விதை, பூ என அனைத்தும் ஆயுர்வேத, சித்த மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
வேம்பில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. அது பாக்டீரியா தொற்றையும் எதிர்க்கிறது. சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் பூச்சிகளை அகற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், தலையில் பேனை போக்கவும் உதவுகிறது.
வேப்ப மரத்தில் ஏப்ரல் மாதங்களில்தான் பூ பூக்கும். அது நிறைய உணவுகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பச்சடி, பொடி, ரசம், சூப் என அதில் இருந்து பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
நம் ஊரில் ஆங்காங்கே வேப்ப மரங்கள் உள்ளது. சித்திரை மாதத்தில் காய்க்கும் அதன் பூக்களை காய வைத்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.
தமிழ் புத்தாண்டுக்கு தயாரிக்கப்படும் இந்த ரசம் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். இது கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நோய் எதிர்ப்பை வழங்கும். காய்ந்த வேப்பம் பூக்கள் ரசத்தில் மிதக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.