National Deworming Day: மக்களே ரெடியா? - இன்று குடல் புழுக்களை விரட்டும் நாள்!
Feb 10, 2024, 06:40 AM IST
National Deworming Day 2024: 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் பிப்ரவரி 10 தேசிய குடற்புழு நீக்க தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவாமல் சாப்பிடுதல், கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுதல், திறந்த வெளியில் மலம் கழித்தல், சுத்தம் பேணாமல் இருத்தல் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு குடற்புழுக்கள் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக 1 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு குடற்புழு நோய் தாக்கி ரத்தசோகை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் பரவலை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க ( National Deworming Day) தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
மண்ணின் வழியாக பரவும் குடல்புழு தொற்றுக்களைத் தடுப்பதற்காக 'அல்பெண்டசோல்' என்னும் மாத்திரைகளை உட்கொள்ள செய்து, இந்த நோயின் பாதிப்புகளை தடுப்பதே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். இந்த மாத்திரைகள் 1 முதல் 19 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகிய இரு பாலர்களுக்கும் கொடுக்கப்பட்டு உட்கொள்ளச் செய்யப்படுகிறது.
குடல்புழு என்றால் என்ன?
குடல் புழுக்கள் என்பது மனித குடலில் காணப்படும் ஒருவகை ஒட்டுண்ணிகள் வகையாகும். இவை சிறு குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க கொடுக்கப்படும் அதே ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் செழித்து வளர்கின்றன. இரைப்பை குழாயில் காணப்படும் இந்த புழுக்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் நிகழ வேண்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை தடுக்கின்றன.
குடற்புழு நீக்கம் என்றால் என்ன?
குடற்புழு நீக்கம் என்பது குழந்தையின் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அல்லது குடல் புழுக்களை அழிப்பதன் மூலம் புழு நோய்த்தொற்றுகளைத் தீர்க்க மருந்துகளைப் பயன்படுத்துவதாகும். மண்ணில் இருக்கும் புழுக்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் நுழைந்து வளர்ச்சி தடை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த உயிரினங்கள் புழுக்கள் நிறைந்த உணவு அல்லது கழிவுகளை தொடுவதன் மூலமாகவும் நம் உடலில் ஊடுருவுகின்றன. இப்படி உள்நுழையும் புழுக்கள் குடலுக்குள் சென்று ரத்த சோகை, அஜீரணம், எடை இழப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. குடல்புழு தொற்றுக்களைத் தடுப்பதற்காக 'அல்பெண்டசோல்' என்னும் மாத்திரைகளை உட்கொள்ள செய்து, இந்த நோயின் பாதிப்புகளை தடுக்கலாம்.
குடற்புழு நோயை தடுப்பது எப்படி?
- சாப்பிடுவதற்கு முன்பு குழந்தைகளின் கைகளை கழுவ வேண்டும்.
- சமைப்பதற்கு முன் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளையும் பெற்றோர்கள் கழுவ வேண்டும்
- வடிகட்டப்பட்ட தண்ணீரை குடிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தவும்.
- குழந்தையின் நகங்களை ஒழுங்கமைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- குழந்தைகள் குளியலறையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கை கழுவ வேண்டும்.
- விரல்களை உறிஞ்சுவது, நகங்களைக் கடிப்பது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்களைத் தவிர்க்கவும்.
- குழந்தையின் உணவு எப்போதும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
நோக்கம்
இந்நாளில் சுகாதார துறை சார்பில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது இந்நாளில் வழக்கம்.
இதுதவிர அங்கன்வாடி மையங்களிலும் இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. எனவே 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் பிப்ரவரி 10 தேசிய குடற்புழு நீக்க தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உங்கள் குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் கொடுத்து நோய் வராமல் தற்காத்துக் கொள்ளுங்கள்..!