Moong Dal Tiffin Sambar : இட்லி, தோசைக்கு இதமான பாசிப்பருப்பு சாம்பார்! வேற லெவல் சுவைக்கு இப்டி செஞ்சு பாருங்க!
Mar 12, 2024, 11:00 AM IST
Moong Dal Tiffin Sambar : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிக்கடி பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் சாம்பார், கடப்பா, சூப், வடை என பல்வேறு உணவுகள் செய்யலாம். எனவே இவற்றையெல்லாம் செய்து, சாப்பிட்டு பல்வேறு நன்மைகளையும் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – கால் கப்
கேரட் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
கத்தரிக்காய் – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
தக்காளி – 2
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 4
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், கத்தரிக்காய் மற்றும் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
உடன் முழு தக்காளியையும் சேர்த்து, ஒரு கப் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
பின்னர் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மூடி வைத்து 4 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவவேண்டும்.
புளியை தண்ணீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கிய பின், தக்காளியை எடுத்து தனியாக ஆறவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல், வேகவைத்த தக்காளி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
குக்கரில் இருக்கும் வெந்த கலவையை லேசாக மசித்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் வேகவைத்து மசித்த கலவையை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
அடுத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். .
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய், தக்காளி சாம்பார் பொடி விழுதை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் 7 நிமிடங்கள் சாம்பாரை நன்றாக கொதிக்க விடவேண்டும். கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவேண்டும்.
நன்றி - விருந்தோம்பல்.
பாசிபருப்பின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்
100 கிராம் பாசிப்பருப்பில் 347 கலோரிகள் உள்ளது. சேச்சுரேடட் கொழுப்பு 0.3 கிராம், மொத்த கொழுப்பு 1.2 கிராம், சர்க்கரை 7 கிராம், சோடியம் 15 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 16 கிராம், மொத்த கார்போஹைட்ரேட் 63 கிராம், பொட்டாசியம் 1,246 மில்லி கிராம் உள்ளது.
மற்ற பருப்புகளைவிடவும் பாசிப்பருப்பில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடை குறைக்க விரும்புபவர்கள் இதை பயன்படுத்தலாம். மற்ற பருப்புக்களைவிட இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
எளிதில் ஜீரணமாகக்கூடியது – பாசிபருப்பு எளில் செரிமானம் ஆகக்கூடியது. செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது. வயிறு கோளாறுகள் உள்ளவர்களுக்கும் ஏற்றது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவி, வழக்கமான குடல் இயக்கத்துக்கு பயனளிகிறது.
எடைக்குறைப்பு நண்பன் – இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக புரதச்சத்துக்கள், எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாகும். இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் அதிகளவில் உட்கொள்வதை தடுக்கும்.
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது – பாசிபருப்பில், வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளது. அது சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சருமத்தில் உள்ள செல்களை மீண்டும் உருவாக்கவும், கொலஜென் உற்பத்திக்கும் உதவுகிறது. இதில் உள்ள சிங்க் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் சரும ஆரோக்கியத்துக்கும், முன்னரே தோன்றும் வயோதிகத்தையும் தடுக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிக்கடி பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் சாம்பார், கடப்பா, சூப், வடை என பல்வேறு உணவுகள் செய்யலாம். எனவே இவற்றையெல்லாம் செய்து, சாப்பிட்டு பல்வேறு நன்மைகளையும் பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9