தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Medical Prescription : ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளில் பிழை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Medical Prescription : ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளில் பிழை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Priyadarshini R HT Tamil

Apr 14, 2024, 11:02 AM IST

google News
Medical Prescription : அனுபவமிக்க மருத்துவர்களின் 10 சதவீத மருந்து பரிந்துரை சீட்டுகளில் தவறு உள்ளது என இந்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Medical Prescription : அனுபவமிக்க மருத்துவர்களின் 10 சதவீத மருந்து பரிந்துரை சீட்டுகளில் தவறு உள்ளது என இந்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Medical Prescription : அனுபவமிக்க மருத்துவர்களின் 10 சதவீத மருந்து பரிந்துரை சீட்டுகளில் தவறு உள்ளது என இந்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறப்பு மருத்துவமனைகள் (Tertiary Care Hospitals), கல்வியை போதிக்கும் மருத்துவமனைகள் (Teaching Hospitals) இவற்றில் பணிபுரியும் மருத்துவர்களின் 10 சதவீத மருந்து பரிந்துரைச் சீட்டுகளில் தவறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. தேவையில்லாமல் மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால், மருத்துவரை நம்பி வரும் நோயாளிகளுக்கு தேவையில்லாத பணச் செலவு ஏற்படுவதுடன், மருந்து மற்றும் மாத்திரைகளின் தவிர்க்கப்பட வேண்டிய பின்விளைவுகளுக்கும் (Adverse Drug Reactions-ADR) நோயாளிகள் ஆளாகும் சூழல் உள்ளதோடு, சிகிச்சையில் தோல்வியும் ஏற்படுவதாக ஆய்வுக் கட்டுரையில் செய்தி வெளியாகியுள்ளது.

Indian Journal of Medical Research பத்திரிக்கையில், சிறப்பு மருத்துவமனைகளில் (Tertiary Care Hospitals) பரிந்துரைக்கப்பட்ட 4,838 மருந்து பரிந்துரை சீட்டுகளை ஆய்வுசெய்து அதன் முடிவுகள் கட்டுரையில் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வு 13 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் - ICMR-Rational Use of Medicines Centres (RUMC) மூலம் AIIMS டெல்லி உட்பட பல்வேறு சிறப்பு மருத்துவமனைகள், கல்வி போதிக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ஆகஸ்ட் 2019 ஆகஸ்ட் 2020 இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

மொத்த பரிந்துரை சீட்டுகளில் 9.8 சதவீதம் வழக்கத்திற்கு மாறாக, தவறான பரிந்துரைகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.

எவை தவறான பரிந்துரைகள்?

பரிந்துரைக்கப்பட்ட 2 மருந்துகள் வினைபுரிந்து பிரச்னையை உருவாக்குதல் (Drug Interactions),

எதிர்பார்த்த பலன் இல்லாமல் போவது (Lack of response),

மருந்துகளால் தேவையற்ற பணச்செலவு,

தவிர்க்கப்பட வேண்டிய மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுகள் (ADR),

தவறான பரிந்துரையால் கிருமிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை உருவாதல் போன்றவையாகும்.

முதுகலைப்பட்டம் பெற்று, தங்கள் துறையில் 4 முதல் 18 ஆண்டு அனுபவம் பெற்ற மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டுகளில் தான் 10 சதவீதம் தவறுகள் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

475 தவறுகள் நிறைந்த மருந்து பரிந்துரை சீட்டுகளில் 102 சீட்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் முடிவுகள் தவறாக (Diagnosis) இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவற்றில், தேவையற்று மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேன்டபிரசோல் (வயிற்றுப்புண் மருந்து),

ரேபிபிரசோல் மற்றும் டாம்பெரிடோன் கலவை மருந்து (வயிற்றுப் புண் மருந்து),

டிரிப்சின், கைமோடிரிப்சின் மருந்துகள் (அஜீரணக் கோளாறு மருந்து),

செர்ராசியோபெப்டிடேஸ் (வீக்கத்தை குறைக்கும் மருந்து)

அசித்ரோமைசின் (கிருமிக்கொல்லி),

ரானிடிடின் (வயிற்றுப் புண் மருந்து),

செபிக்சைம் (கிருமிக்கொல்லி),

அமாக்சிசிலின் மற்றும் பொட்டாசியம் கிளாவுலானிக் அமிலம் கலவை (கிருமிக்கொல்லி),

அசிக்குளோபெனாக் (வலியை கட்டுப்படுத்தும் மருந்து)

போன்ற மருந்துகள் தவறாகவும், தேவையில்லாமலும் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மேற்சொல்லப்பட்ட மருந்துகள் நோய்குறிகளை கட்டுபடுத்த மட்டுமன்றி, மருந்துகளின் பின்விளைவுகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வலி என ஒருவர் மருத்துவரை அணுகும் போது, வயிற்றுப்புண் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அல்லது வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு மட்டும், வயிற்றுப்புண்ணை தடுக்கும் மருந்துகள், வலி மாத்திரைகளோடு இணைந்து பரிந்துரைக்கப்பட வேண்டும். 

தேவையற்று பேன்டோபிரசோல் (வயிற்றுப்புண் தடுப்பு மருந்து) பயன்படுத்தப்பட்டால், அதன் காரணமாகவே, வயிறு உப்புசம் (Bloating), நீர்கோர்த்தல்(Oedema), தோலில் அரிப்பு (Rash), எலும்பு பலவீனம், இதய பாதிப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்பட முடியும்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேல் கிருமிக்கொல்லிகள் தேவையற்று பயன்படுத்தப்படுகிறது.

வைரஸ் தொற்றுக்கு பயனளிக்காத கிருமிக்கொல்லிகள் 87 சதவீதம் தேவையற்று பயன்படுத்தப்படுகிறது என்பதே கள உண்மை.

4 முதல் 18 ஆண்டு அனுபவமுள்ள முதுகலை மருத்துவர்களின் மருந்து பரிந்துரைச் சீட்டுகளில் 10 சதவீதம் தவறு உள்ளது என்றால், அனுபவம் குறைந்த மருத்துவர்கள் மேலும் தவறுடன் மருந்து அல்லது மாத்திரைகளை பரிந்துரை செய்யும் வாய்ப்பு அதிகம்.

55 சதவீதம் மருத்துவர்கள் மட்டுமே மருந்து பரிந்துரைப்பதில், சரியான அரசு உலக நிறுவனங்கள் வகுத்த விதிகளை பின்பற்றுகின்றனர்.

மருத்துவ துறையில் மெரிட் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்படும் நீட் தேர்வு, இதற்கான தீர்வை அளிக்கமா? என்பதும் கேள்விக்குறியே. எனவே, நீட் தேர்வு நிச்சயம் தேவைதானா?

நோயாளிகள் விழிப்புணர்வு பெற்றால் தான் இத்தகைய பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி