Kambu Dosai : கோடையை குளுமையாக்கும்! காலையை அருமையாக்கும்! கம்பு தோசை செய்வது எப்படி தெரியுமா?
May 27, 2024, 04:02 PM IST
Kambu Dosai : கோடையை குளுமையாக்கும்! காலையை அருமையாக்கும்! கம்பு தோசை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாமா?
Kambu Dosai : கோடைக்காலத்துக்கு ஏற்ற உணவாக செஃப் முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் பரிந்துரைப்பது கம்பு தோசையை. இதன் செய்முறை குறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில்,
‘கோடைக்காலம் என்றாலே நாம் வெப்பத்தை விரட்டக்கூடிய உணவு வகைகளைத்தான் தேடித்தேடிச் செல்ல வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய உணவுகளுள் முக்கியமானது இந்த கம்பு.
கம்பில் கூழ், சோறு என செய்து சாப்பிடலாம். ஆனால் குழந்தைகள் அவற்றையெல்லாம் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு தோசையாக செய்து கொடுத்தால் அவர்களை சாப்பிட வைக்க முடியும். இதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்’ என்றார்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – அரை கப்
கம்பு – ஒரு கப்
கருப்பு உளுந்து – அரை கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கம்பு சேர்த்து தண்ணீரில் மூன்று முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் வரை ஊறவைக்கவேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து கழுவி சிறிது தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின் கிரைண்டரில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக பொங்கும் வரை அரைத்து எடுத்துக்கொள்வேண்டும்.
அதோடு ஊறவைத்த அரிசி கம்பை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கைகளால் கலந்து மூடி வைக்கவேண்டும்.
எட்டு மணி நேரம் மாவை புளிக்க வைத்து, பின்னர் மீண்டும் ஒருமுறை கலந்துகொள்ளவேண்டும்.
தோசைக்கல்லை மிதமான சூட்டில் காயவைத்து உங்கள் விருப்பம்போல கல் தோசை போல கனமாகவோ அல்லது முறுகல் தோசை போல மெலிதாகவோ விட்டு நல்லெண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வரும் வரை வேகவைத்து எடுக்கவேண்டும். ஆரோக்கியமான கம்பு தோசை சூப்பர் சுவையில் தயாராக உள்ளது.
மேலும் அவர் கூறுகையில், கம்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நமது முன்னோர்களின் அன்றாட உணவில் கம்பு இடம்பெற்றிருந்தது. அதன் நன்மைகளையும், சத்துக்களாக அவர் கூறியதாவது,
கம்பில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.
கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானம் மெதுவாக நடக்க உதவுகிறது. கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
கம்பில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.
சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.
வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது. இதை ராஜ்மா, பாசிபருப்பு, கொண்டடைக்கடலை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.
கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது. கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.
கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.
உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது. குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.
டாபிக்ஸ்