Heart Attack : தமிழகத்தில் 100ல் ஒருவருக்கு மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக் அபாயம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Apr 23, 2024, 03:42 PM IST
இந்த ஆய்வின் முடிவுகள், இந்தியளவிலும், உலகளவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஒத்து இருந்தது.
தமிழகத்தில் 100ல் ஒருவருக்கு மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு (Stroke) ஏற்படும் அபாயம் என தமிழக அரசின் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பொதுசுகாதாரத்துறையின் ஆய்வில், தமிழகத்தில் 100ல் ஒருவருக்கு மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு (Stroke) ஏற்படும் (உயிருக்கு ஆபத்து விளைவித்தோ (அ) விளைவிக்காமலோ) -Fatal or Non-fatal அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின்-WHO-ISH வரைபட அபாயக் குறியீடுகளை பின்பற்றி, திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த 1,260 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், மேற்கூறப்பட்ட முடிவு எட்டப்பட்டுள்ளது.
பத்தாண்டு காலங்களில் உயிருக்கு ஆபத்து விளைவித்தோ அல்லது விளைவிக்காமலோ ஏற்படும் மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு அபாய வாய்ப்பு கணக்கிடப்பட்டதில், 5ல் ஒருவருக்கு நடுத்தர அபாய வாய்ப்பு (Moderate Risk-23 சதவீதம்) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், வயது, பாலினம், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மொத்த கொழுப்பின் அளவு, உபவகையான, HDL கொலஸ்ட்ரால் (நன்மை பயக்கும் கொழுப்பு), தீய கொலஸ்ட்ரால் (LDL கொழுப்பு), சர்க்கரை நோய் போன்றவை கணக்கில்கொள்ளப்பட்டு அபாய அளவு கணக்கிடப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள், மாநில பொதுசுகாதார ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு விவரம்
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள் - வயது-40-44.
உடல் பருமன் அதிகம் (Obesity) இதயப் பிரச்னை ஏற்படுவதற்கான முக்கிய அபாயக் குறியீடு ஆய்வில் கலந்துகொண்ட 60 சதவீதம் பேரிடம் இருந்தது.
ஆய்வில் கலந்துகொண்ட 53 சதவீதம் பேரில் மொத்த கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தது.
உயர் LDL கொழுப்பு (தீய கொழுப்பு), 29.4 சதவீதம் பேரிடம் அதிகமாக இருந்தது.
இதய பிரச்னைக்கு ஒரு முக்கிய காரணமான புகைபிடித்தல் (Smoking), ஆய்வில் கலந்துகொண்ட 5 சதவீதம் பேரிடம் இருந்தது.
ஆய்வில் கலந்துகொண்ட 19.5 சதவீதம் பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருந்தது.
உயர் ரத்தஅழுத்தம் 22.5 சதவீதம் பேருக்கு இருந்தது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில், மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு (Stroke) ஏற்படும் அபாயம், 76 சதவீதம் பேருக்கு குறைந்த அபாயமும் (Low Risk), 23 சதவீதம் பேருக்கு நடுத்தர அபாயம் (Moderate Risk), 1 சதவீதம் பேருக்கு அதிக அபாயம் (High Risk), அடுத்த 10 ஆண்டுகளில் எற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள், இந்தியளவிலும், உலகளவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஒத்து இருந்தது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
இந்த அபாயம் உள்ளவர்களை "மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில்" இணைத்து, சரியான அல்லது தகுந்த சேவைகளை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு எற்படும் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தொற்றா நோய்களின் இறப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முனைப்புக் காட்டும் என தெரிவிக்கப்பட்டாலும், "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தில் மாதம் ஒருமுறை மட்டுமே, பரிசோதனைகள் (ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு அளக்கப்பட்டு) மேற்கொள்ளப்பட்டு, மாத்திரைகள் மட்டும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படுதலுக்குப் பதிலாக, துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தினால், மாதத்தின் அனைத்து நாட்களிலும், சிகிச்சை நோயாளிகளின் வீட்டருகிலே அளிக்கப்பட்டு, கூடுதல் பலன்கள் பெறலாம் எனத் தெளிவாக இருந்தும், தமிழக அரசு துணை சுகாதார நிலையங்கள் தினமும் செயல்பட்டு மக்களிடையே நோய் பாதிப்பை கூடுதல் திறனுடன் கட்டுப்படுத்த முடியும் என இருந்தும், அதை செய்யாமல் இருப்பது எப்படி சரியாகும்?
தமிழக மாநில திட்டக் கமிஷன், 2 சதவீதம் Gross State Domestic Product ஐ 2030க்குள், சுகாதாரத் துறைக்கு ஒதுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தும், தற்போது தமிழகத்தில், 0.7 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவது எப்படி சரியாகும்?
எனவே, தமிழக அரசு, சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கியும், துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தி, தினமும் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதிபடுத்தினால் மட்டுமே தொற்றா நோய்களின் உயிரிழப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
தமிழக அரசு செவிசாய்க்குமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்