தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரை மிளகூட்டல்; சூப்பர் சுவையானது! இதோ எப்படி செய்வது பாருங்கள்!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரை மிளகூட்டல்; சூப்பர் சுவையானது! இதோ எப்படி செய்வது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Nov 23, 2024, 02:39 PM IST

google News
கீரை மிளகூட்டல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கீரை மிளகூட்டல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கீரை மிளகூட்டல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கீரையில் உள்ள நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கீரையில் பெண்களுக்குத் தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளது. இரும்புச்சத்துக்கள் உங்களுக்கு அனீமியாவைத் தடுக்க உதவுகிறது. இது உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கின்றன. 100 கிராம் கீரையில் 2.7 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. ஃபோலேட், கர்ப்பிணிகளுக்கு கரு வளர்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து ஆகும். இது குழந்தைகளுக்கு நரம்புகளில் பிரச்னைகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. 100 கிராம் கீரையில் 165 மில்லிகிராம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 100 கிராம் கீரையில் 99 மில்லிகிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும், தசைகளின் இயக்கத்துக்கு உதவுவதற்கும் உங்களுக்கு கால்சியம் மிகவும் தேவைப்படுகிறது.

100 கிராம் கீரையில் 79 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தசைகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. ரத்தத்தை உறையச் செய்யவும், 100 கிராம் கீரையில் 482 மில்லி கிராம் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது. பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க வைட்டமின் கே தேவைப்படுகிறது. 100 கிராம் கீரையில் ஒரு நாளைக்கு தேவையான அளவு வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இது கண் பார்வைத்திறன் மற்றும் எலும்பு ஆரோக்கியம் என அனைத்துக்கும் உதவுகிறது. வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். 100 கிராம் கீரையில் 28.1 மில்லிகிராம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. லியூட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. 100 கிராம் கீரையில் 10 மில்லிகிராம் லியூட்டின் உள்ளது.

100 கிராம் கீரையில் 558 மில்லிகிராம் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. 100 கிராம் கீரையில் 0.9 மில்லிகிராம் மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் எலும்பு வளர உதவுகிறது. இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கீரையில் மிளகூட்டல் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

சிறு கீரை – ஒரு கட்டு

(உங்களுக்கு பிடித்த எந்த கீரையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

சீரகம் – ஒரு ஸ்பூன்

துவரம் பருப்பு – ஒரு கப்

தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்

மிளகு – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 1

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பூண்டு – 2 பல்

செய்முறை

துவரம் பருப்பை வேக வைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். (துவரம் பருப்டிப வேக வைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்)

கீரையை பொடியாக நறுக்கி வேகவைக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம், வர மிளகாய், தேங்காய்த்துருவல், பூண்டு பற்கள் சேர்த்து வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்த மசாலா இரண்டையும் வேகும் கீரையில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கலந்துவிடவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து, வெந்துகொண்டிருக்கும் கீரையில் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்தால் சூப்பர் சுவையான கீரை மிளகூட்டல் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி