Global Warming : வரையாடு பாதுகாப்புக்கும், புவிவெப்பமடைதலை குறைப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? – சுவாரஸ்ய தகவல்
Oct 16, 2023, 11:00 AM IST
Global Warming : தமிழகத்தில் வரையாடுகள் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பரப்பில் 5 சதவீதம் (வடக்கே நீலகிரிமலை-தெற்கே அசம்புமலை 400 கிலோ மீட்டர் பகுதி) மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் வரையாடு பாதுகாப்புத் திட்டம் புவிவெப்பமடைதலைக் குறைக்கும் என்பதை மக்கள் அறிந்துள்ளனரா?-
தமிழக அரசின் மாநில விலங்கு வரையாடு. அதை காக்க தமிழக அரசு ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்நிதி முறையாக பயன்படுத்தப்பட்டால், புவிவெப்பமடைதலைக் குறைக்கும் பணியும் தமிழகத்தில் நடந்தேறும் என்ற உண்மை ஆச்சர்யமளிக்கிறதா? ஆம் அதுதான் உண்மை. வரையாடு பாதுகாப்புக்கும், புவிவெப்பமடைதலை குறைப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன?
தமிழகத்தில் வரையாடுகள் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பரப்பில் 5 சதவீதம் (வடக்கே நீலகிரிமலை-தெற்கே அசம்புமலை 400 கிலோ மீட்டர் பகுதி) மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.
தனது வாழ்விடங்கள் அழிந்து 14 சதவீதம் பகுதிகளில் அவை முற்றிலும் மறைந்து போயுள்ளது. (123 வாழ் பகுதிகளில் 20 வாழ் பகுதிகளில் அவை முற்றிலும் அழிந்துபோயுள்ளது)
0.04 – 161.69 சதுர கிலோமீட்டருக்கு இடைப்பட்ட மொத்த 798.60 சதுர கிலோ மீட்டர் பரப்பில் வரையாடுகள் (2,000 – 3,000) இன்றும் வாழ்ந்து வருகின்றன.
அவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்து வந்தாலும், அவை வாழும் பகுதியின் தொடர்புகள் (Connectivity) மனித நடவடிக்கைகள், இயற்கை நில பரப்பின் அம்சங்கள், சாலைகள், செயற்கை தேயிலைத் தோட்டங்கள், மனித குடியிருப்புகள், ஆறுகள், அடர்ந்த காடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக, கேரள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரிதாக 5 முக்கிய பகுதிகளில் (Blocks) மட்டுமே அவை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வரையாடுகள் 120 வகை தாவரங்களை உணவாக உட்கொண்டாலும், மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் ஊடுறுவி வளரும் மாண்டனா கேமரா வகை தாவரம் 2018ல் 47 சதவீதம் பரப்பை ஆக்கிரமித்துள்ளது. (1997ல் அது வெறும் 4 சதவீதம் பரப்பில் மட்டுமே இருந்தது) வரையாடுகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
1400-2700 மீட்டர் உயரத்தில் உள்ள (அந்த உயரத்தில் தான் வரையாடுகள் அதிகம் உள்ளன) சோழா புல்வெளி சூழல் அமைப்பில் உள்ள தாவரங்கள் நிலத்துக்கடியில் உள்ள தனது வேர்களிலும், மண்ணிலும் கார்பனை அதிகளவு தேக்கி வைத்துள்ளது.
வரையாடுகள் பாதுகாப்பு புவிவெப்பமடைதல் பிரச்னையிலிருந்து நம்மை பின்வரும் வழிகளில் காக்கிறது.
Chrysopogan nodulibarbis, Themeda triandra, Andropogon polyptychus, Dicanthium foulkelsii வகை முசாக் புற்கள் அதிகளவில், காடுகளை விட மிகவும் நம்பத்தகுந்த வழிகளில் அதிக கார்பனை சேமித்து வைக்கும் தன்மை கொண்டவை என்பதால், புவிவெப்பமடைதலைக் குறைக்க அவற்றின் பங்கு மிக முக்கியமானது.
120 வகை தாவரங்களை வரையாடுகள் உட்கொண்டு, அவற்றின் எச்சத்தில் வெளியாகும் செறிக்காத விதைகளை காடுகளில் பரவலாக்கும் வேலையை வரையாடுகள் செய்து, நல்ல செழிப்பான (பல தாவரங்கள் நிறைந்த) காடுகளை வரையாடுகள் உருவாக்குவதால், அவற்றை நம்பி வாழும் பல்லுயிர்கள் பலனடைந்து பல்லுயிர் பெருக்கம் உறுதிசெய்யப்படுகிறது.
வரையாடுகள் இளந்தளிர் இலைகளை விரும்பி உண்பது, இலைகள் நன்கு மீண்டும் செழித்து வளரவும், புதிதாக கிளைகள் உருவாகவும் காரணமாக இருந்து, காடுகளின் வளர்ச்சிக்கு துணைபோகிறது.
வரையாடுகள் இருப்பதால், அவற்றைப்போல அந்த பகுதியில் வாழும் பிற தாவர உண்ணிகளின் (காட்டெருமை, சாம்பார் மான்கள்) எண்ணிக்கையில் சமச்சீர் ஏற்பட்டு, குறிப்பிட்ட உயிரினம் அதிகளவில் வளராமல் பாதுகாத்து சமச்சீர் தன்மையை சூழல் சங்கிலியில் உருவாக்கும் பொறுப்பையும் வரையாடுகள் செய்துவருகின்றன.
எனவே அரசு வரையாடுகளைக் காக்க செலவழிக்கும் தொகை முறையாக பயன்படுத்தப்பட்டால், வரையாடுகள் காக்கப்படுவதுடன், புவிவெப்பமடைதல் பிரச்னையை குறைக்கும் வேலையும் இணைந்தே நடக்கும். நிதி முறையாக பயன்படுத்தப்படுவதை கண்காணிக்க தன்னார்வ வன காப்பாளர்களுடன் அரசு இணைந்து செயல்படுவது நல்லது. வரையாடுகளைக் காப்போம். புவிவெப்பமடைதலைக் குறைப்போம்.
தகவல் - மரு.வீ.புகழேந்தி.
டாபிக்ஸ்