Fenugreek Rice with Coconut Chutney : வெயிலுக்கு இதமான வெந்தய சோறு! பிசைந்து சாப்பிட்ட தேங்காய் துவையல்! இதோ ரெசிபி!
Apr 19, 2024, 01:49 PM IST
Fenugreek Rice with Coconut Chutney : வெயிலுக்கு இதமான வெந்தய சோறும், பிசைந்து சாப்பிட்ட தேங்காய் துவையலும் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
எளிதில் செய்யும் ஆரோக்கிய உணவுகளும் ஒர் விருந்துதான். வெந்தய சோறு மற்றும் தேங்காய் துவையலை செய்து சாப்பிட்டு பாருங்க இந்த வெயிலுக்கு இதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
பூண்டு பற்கள் – 7
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயை சூடாக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவேண்டும். வெந்தயம் சிவந்து வாசம் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவேண்டும்.
குக்கரில் களைந்த அரிசி, வறுத்த வெந்தயம், பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கலந்து மேலே 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மூடி வைத்து 3 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் குறைந்த சூட்டில் வேகவைத்து இறக்கவேண்டும்.
குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் சாதத்தை மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும்.
இந்த சாதத்தோடு பிசைந்து சாப்பிட்ட தேங்காய்த்துவையல்
தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 8
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கட்டி பெருங்காயம் – சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவேண்டும். பின் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவேண்டும். அதே கடாயில், பெருங்காயம் மற்றும் மிளகாய் வற்றலை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவேண்டும்.
மிக்ஸி ஜாரில் ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பு, தேங்காய்த்துருவல், வறுத்த மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவேண்டும்.
பின் வறுத்த பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கடைசியாக வறுத்த கடுகு உளுந்தை சேர்த்து கொர கொரப்பாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த துவையலை பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
வெந்தய சாதத்தோடு சிறிது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய்த்துவையல் அப்பளம் வைத்து பரிமாறவும். ஆரோக்கியமான எளிமையான வெந்தய சாதம் தயார்.
நன்றி – விருந்தோம்பல்.
வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உடலுக்கு நன்மை அளிக்கிறது.
இது செரிமானத்துக்கு உதவுகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.
இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.
உடல் சூட்டை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்