10 நாட்கள் கெடாது வெந்தயக் குழம்பு; சூடான சாதத்துக்கு ஏற்றது! செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!
Nov 23, 2024, 01:06 PM IST
10 நாட்கள் ஆனாலும் கெடாத வெந்தயக்குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.
வெந்தயக் குழம்பு வைப்பதற்கு முன், வெந்தயத்தில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உடலுக்கு நன்மை அளிக்கிறது. இது செரிமானம் மற்றும் எடை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது. உடல் சூட்டை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெந்தயம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பதால், இந்த குழம்பு உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெந்தயத்தில் குழம்பு செய்து சாப்பிட உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை செய்து வைத்துவிட்டால் 10 நாட்களுக்கு கெடாது. எனவே இந்த குழம்பை செய்து வைத்துக்கொள்ளுங்கள். சூடான சாதத்தில் தேவைப்படும்போது பிசைந்து சாப்பிடலாம். வெளியூர் செல்லும்போது எடுத்துச்செல்ல ஏற்றது.
தேவையான பொருட்கள்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் – 10 முதல் 15 பல்
பழுத்த தக்காளி – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
(சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் வெந்தயம் மற்றும் சீரகத்தைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், கடுகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து தக்காளிப்பழத்தை நறுக்கி நன்றாக குழைய வேகவிடவேண்டும். தக்காளியை அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பச்சை வாசம் போகும் வரை வெந்தவுடன், உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். ஓரங்களில் எண்ணெயை பிரிந்து வரும் வரை வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அடுத்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் சீரகப்பொடியை தூவிக்கொள்ளவேண்டும்.
இந்தப்பொடியை குழம்பு கெட்டியாகும் நேரத்தில் தூவி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சூப்பர் சுவையான வெந்தயக் குழம்பு தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடவேண்டும். இது பத்து நாட்கள் ஆனாலும் கெடாது. ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும்போது சூடாக்கி சாப்பிடவேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்