Diwali Special Sweet : சுவையான பாரம்பரிய பலகாரம்! செட்டிநாடு உக்கரை! தீபாவளி மேலும் இனிக்கட்டும்!
Oct 14, 2023, 08:00 AM IST
பாசிபருப்பு மற்றும் வெல்லம் வைத்து செய்யக்கூடியது இந்த உக்கரை எனும் செட்டிநாடு பாரம்பரிய பலகாரம். தென் தமிழகத்தில் பாரம்பாரியமாக பண்டிகை காலங்களில் செய்யப்படும் இந்த இனிப்பை செய்து இந்த தீபாவளியை மேலும் இனிமையாக்குங்கள்.
தேவையான பொருட்கள்
பாசிபயறு – கால் கப்
ரவை – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
தேங்காய் – 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
முந்திரி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – 4 டேபிள்
வெல்லப்பாகு செய்ய தேவையானவை
வெல்லம் – அரை கப்
தண்ணீர் – கால் கப்
செய்முறை
வெல்லத்தை தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் பாசிபருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் கொதித்து பாசி பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்பு நன்றாக மசியவேண்டும். ஆனால் முழுதாக இருக்க வேண்டும். அதிகம் குழைந்துவிடக்கூடாது. அதிகம் தண்ணீர் இருந்தால் அதை வடித்து விடவேண்டும்.
மற்றொரு கடாயில், ரவையை வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசி மாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காயையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதில் வேகவைத்த பாசிபருப்பை சேர்க்கவேண்டும். நன்றாக கலந்துவிட்டு, அதில் வறுத்த ரவை மற்றும் அரிசி மாவையும் சேர்த்த நன்றாக கலந்துவிட்டு அனைத்தும் வெந்து வரவேண்டும்.
கெட்டியானவுடன், ஏற்கனவே தயாராக வைத்துள்ள வெல்லப்பாகையும் அதில் சேர்க்க வேண்டும்.
அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்க வேண்டும். சிறிதளவு உப்பு மற்றும் வறுத்த முந்திரி ஆகிய அனைத்தையும் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறிவிட்டால் கிடைப்பது சுவையான செட்டிநாடு உக்கரை. இந்த தீபாவளிக்கு கட்டாயம் இந்த இனிப்பு பலகாரத்தை செய்து தீபாவளியை மிகுந்த மகிழ்ச்சியானதாக்குங்கள்.
இதற்கான சரியான பதம் அல்வா பதம்தான். ஆனால் இதை நீங்கள் மேலும் சிறிது நேரம் கிளறிக்கொண்டிருந்தால் புட்டு பதத்துக்கு வரும். அது ரவை, பாசிபருப்பு புட்டு ஆகிவிடும். ஆனால் நீங்கள் கையை எடுக்காமல் தொடர்ந்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
உப்பு இன்னும் சிறிது அதிகம் சேர்த்தால் அது இனிப்பு சுவையை மேலும் அதிகரித்துக்காட்டும்.
பருப்பு, ரவை, அரிச மாவு என அனைத்தும் வெந்தவுடன்தான் வெல்லப்பாகை சேர்க்க வேண்டும்.
பாசிபருப்பை நீங்கள் குக்கரில் வைத்து ஒன்று அல்லது இரண்டு விசில் விட்டு வேண்டுமனாலும் எடுத்துக்கொள்ளலாம்.
பாசிபருப்பில் தண்ணீர் அதிகம் வைத்துவிட்டால் அதை வடித்து நீங்கள் சாம்பார் அல்லது ரசத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
எண்ணெய் இனிப்புக்கு மிருதுவான தன்மையை கொடுக்கிறது.
நெய் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கூடுதலாகவோ குறைவாகவோ பயன்படுத்திவிடவேண்டாம். சுவை நன்றாக இருக்காது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.