Summer Tips: கோடைக்காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்
Apr 29, 2023, 03:25 PM IST
கோடைக்காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில நாட்களில் பொசுக்கி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் ஆரம்பமாகிவிடும். எனவே அடுத்து அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கலாம். இதைச் சமாளிக்க அந்தந்த பருவநிலைக்கு தகுந்த உணவு மாற்றங்களையும் செய்ய வேண்டிய அவசியம். மழை நாட்களில் எடுத்துக்கொள்ளும் ஒரு சில உணவுகள் கோடை காலத்துக்கு உகந்ததாக இருக்காது. ஒரு சில உணவுகளால் உடல் நல பிரச்னைகளும் ஏற்படலாம். ஏனெனில் பருவநிலைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலும் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
ஹார்மோன் ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க பருவ காலத்துக்கு ஏற்ப உணவுப் பழக்கங்களில் சரியான மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு, வெப்ப பக்கவாதம், அஜீரணம் போன்ற பல பிரச்னைகள் வரலாம்.
இதை தடுக்க கோடை காலத்தில் செய்யப்பட வேண்டிய உணவு மாற்றங்கள் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அந்தத் தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.
கோடைக் காலத்தில் சோளம், பார்லி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்ச்சியான விளைவை கொண்ட இந்த தானியங்கள் கோடை காலத்துக்கு ஏற்றது.
பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்துக் கொள்ளலாம். இது கோடை காலத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும். இது கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப பக்கவாதம், வியர்வை போன்ற பிரச்சனைகளை நீக்கும்.
கோடையை சமாளிக்க புதினா மோர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
இதை கோடை காலத்தில் குடித்து வர ஏராளமான நன்மைகளை பெறலாம்.
பொதுவாக கோடை நாட்களில் அசிடிட்டி போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இதை தடுக்க இரவு பாலுடன் குல்கந்து கலந்து குடிக்கலாம்.
கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பருவ கால பழங்களான தர்பூசணி, மூலாம் பழம், மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
பழங்களுடன் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கோடையை சமாளிக்க பெரும் உதவும். இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாரம்பரியமாக நடைமுறையில் இருக்கும் கோடைகால பானங்களான சர்பத், இளநீர், மோர், பானகம், பதநீர் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் சமையலுக்கு சீரகம், ஏலக்காய், சோம்பு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மசாலா பொருட்களை பயன்படுத்தலாம்.
கோடைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தயிர்யுடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடலாம்.
டாபிக்ஸ்