Deepavali Special Sweet : உப்புட்டு அல்லது போலி இல்லாம தீபாவளியா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!
Oct 15, 2023, 09:00 AM IST
Deepavali Special Sweet : தீபாவளி பலகாரங்களில் முக்கிய இடம் பிடித்துக்கொள்வது, போலி, குழிப்பணியாரம், சுழியம், வடை இன்னும் சிலவும். போலியில் பருப்பு போலி, தேங்காய் போலி, கார போலி என மூன்று வடிவங்கள் உள்ளது. பருப்பு போலி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
போலி தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பண்டிகை காலங்களில் செய்யப்படுகிறது. இது திருமண விழாக்களில் பாயாசத்துடன் பரிமாறப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் சில மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. இதை செய்வது மிகவும் எளிது. நீங்கள் இதற்கு தேவைப்படும் பொருட்களை தயார் செய்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவைப்படும்போது சூடாக செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய் – 1 கப் (துருவியது)
மைதா – 2 கப்
ஏலக்காய் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
(தேவைப்பட்டால் சேர்க்கலாம் அல்லது வெள்ளை போலிகளாகவும் சுட்டுக்கொள்ளலாம்)
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மைதா மாவுடன் சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை அரை மணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும். மைதா மாவை நல்ல மிருதுவாக பிசைந்துகொள்ள வேண்டும். நீண்ட நேரம் பிசைந்து மிருதுவாக்க வேண்டும்.
கடலை பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் குக்கரில் வைத்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
வெந்த கடலை பருப்பை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக்கொள் வேண்டும்.
இந்த கடலைபருப்புடன், பொடித்த வெல்லம், துருவிய தேங்காய் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். மிக்ஸியில் கடலை பருப்பை அரைக்கும்போது கூட வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கக்கூடாது. ஏனெனில் வெல்லம் சேர்க்கும்போது அதில் உள்ள ஈரப்பதமே போதுமானது. கூடுதலாக தண்ணீர் சேர்த்தால், உள்ளே வைக்கப்போகும் அந்த ஸ்டஃபிங் கொழகொழப்பாக இருக்கும். உருண்டை பிடிக்கும் பதத்துக்கு செய்துகொள்ள வேண்டும்.
மைதா மாவு மற்றும் உள்ளே வைக்கக்கூடிய பருப்பையும் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
முதலில் மைதா மாவை கையிலோ அல்லது சப்பாத்தி கட்டையிலோ வைத்து பரத்திக்கொள்ள வேண்டும். அதனுள் நடுவில் இந்த பருப்பு உருண்டைகளை வைத்து மைதா மாவை மூடி, கையில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தோசை கல்லை சூடாக்கி, போலியை இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெய் அல்லது எண்ணெய் சேர்த்து நன்றாக இருபுறமும் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூடான, சுவையான போலி சாப்பிட தயார். இந்த தீபாவளியன்று சாமிக்கு படைக்க கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.