Amla : குழந்தைகளுக்கு கூட கூடு கூடா முடி கொட்டுதா.. இந்த காயில் சாதம் செஞ்சு கொடுங்க.. ஊட்டச்சத்து நிறைந்தது!
Sep 22, 2024, 12:53 PM IST
Amla Rice : முடி கொட்டுவதை தடுக்க உதவும். இதனால் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் நெல்லிக்காயை கொடுக்க பொற்றோர் விரும்புகின்றனர். நெல்லிக்காயில் ஈசியா சாதம் செய்து கொடுங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.
Amla Rice Recipe : நம் உடலில் அற்புதங்கள் செய்யும் அருமையான உணவுப் பொருட்களில் ஒன்று நெல்லிக்காய். இது பண்டைய காலம் தொட்டு ஆயுர் வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. நெல்லிக்காயை அப்படியே கழுவி ருசிக்கலாம். உப்பு தொட்டு சாப்பிடலாம். தேனில் ஊற வைத்து தேன் நெல்லியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் சாதம் என உணவில் பல வடிவங்களில் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. முடி கொட்டுவதை தடுக்க உதவும். இதனால் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் நெல்லிக்காயை கொடுக்க பொற்றோர் விரும்புகின்றனர். நெல்லிக்காயில் ஈசியா சாதம் செய்து கொடுங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது.
நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
அரசி – 1 கப்
துருவிய நெல்லிக்காய் – 1 கப்
கொத்தமல்லி – கைப்பிடி நறுக்கியது
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்புக்கு
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தப்பருப்பு – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – துருவியது சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4
நெல்லிக்காய் சாதம் செய்முறை
வீட்டில் வழக்கம் போல் சாதத்தை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் பாஸ்மதி அரிசி சாதம் கூட எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்குங்கள். அதில் ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். கடுகு வெடித்த பிறகு அதில் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், 4 சின்ன வெங்காயத்தையும் வெட்டி சேர்த்து கொள்ளுங்கள் வெங்காயம் சிவந்து வரும் போது அதில் கறிவேப்பிலை மட்டும் நெல்லிக்காய் துருவலை சேர்த்து கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் வதங்க ஆரம்பிக்கும் போது தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். நெல்லிக்காயின் பச்சை வாசம் போக ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே வடித்து எடுத்த சாதத்தை கலந்து விடுங்கள். அதில் ஏற்கனவே வெட்டி வைத்த மல்லி இலையை சேர்த்தால் ருசியான நெல்லிக்காய் சாதம் ரெடி. இந்த சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக கர்பிணிகளுக்கு மிகவும் நல்லது. விரும்பி சாப்பிடுவார்கள்.
நெல்லிக்காயின் நன்மைகள்
நெல்லிக்காய் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை பிரச்சனையை சரி செய்ய உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் புற்று நோய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். குடல் இயக்கத்தை துரிதப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தப்பிரச்சனை நீங்கும்.
நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் கண்களில் உள்ள ரெட்டினாவை பாதுகாக்கும். இதனால் கண்களில் நீர் வடிவது தடுக்கப்படும்.
நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க பெரிதும் உதவும். மேலும் இதயத்தை பாதுகாக்க உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.