அற்பத நன்மைகளை கொண்ட கிவி பழங்கள்!
Feb 16, 2022, 07:23 PM IST
பல்வேறு விதமான சத்துக்களின் ஆற்றல் மையமாக திகழும் கிவிப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடைய இந்தப் பழத்தில் வைட்டமின் பி, சி, ஆன்டிஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஓவல் வடிவத்தில் பச்சை நிறத்திலான தோல்களும், இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும் கிவிப் பழம் கிழக்கு சீனா பகுதியை சேர்ந்த பழமாகும். சீனா நெல்லிக்காய் என்று அழைக்கப்படும் இந்தப் பழமானது நியூசிலாந்து, கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளிலும் அதிகமாக விளைகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சிக்கீம், ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், கேரளா ஆகிய பகுதிகளில் கிவிப் பழங்கள் பயிரிடப்படுவதாக இந்திய தோட்டக்கலை வாரியம் தெரிவித்துள்ளது.
கிவிப் பழங்கள் அனைத்தும் காலங்களுக்கு உகந்ததாகவும், கவர்ச்சி மிகுந்த பழங்களாகவும் திகழ்கிறது. இந்தப் பழத்தால் உடலுக்கு கிடைக்கப்படும் அற்புத நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. டிஎன்ஏ பழுதுபார்த்தல்
நமது உடலிலுள்ள டிஎன்ஏ தொடர்ந்து சூரிய ஒளி, புகைப்பிடித்தல் (புகைப்பிடிப்பவர் அருகே இருப்பதும்), புற்றுநோய் மற்றும் அதுதொடர்பான சிகிச்சைகள் (கீமோ தெரபி), அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல், மாசு, பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றன.
டிஎன்ஏ செயல்பாட்டில் குறை ஏற்பட்டால் அல்ஸைமர், இதய நோய், சிறுநீரகம், கல்லீரல், மூளை, உடலிலுள்ள செல்களோடு தொடர்புடைய அனைத்தும் பாதிப்படையக்கூடும். அந்த வகையில் கிவிப் பழம் டிஎன்ஏவை பழுது பார்த்து அதனை ஆற்றலை பெருக்குகிறது.
கிவிப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு குறைவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே புற்றுநோய் சார்ந்த பாதிப்புகளுக்கு கிவிப் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
கிவிப் பழத்தில் அதிகபட்சமாக உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் நோய் தொற்று பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.
3. ரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்
2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கிவிப் பழங்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே நீண்ட கால அடிப்படையில் இதை வைத்து பார்க்கும்போது அதிக ரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய பாதிப்புகளான மாராடைப்பு, பக்கவாதங்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
4. ரத்தம் உறைவதை தடுத்தல்
உடலினுள் ரத்தம் உறைதல் ஏற்படுவதை கிவிப் பழம் தடுக்கிறது. ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள் நாள்தோறும் 2 முதல் 3 கிவிப் பழம் சாப்பிட்டால் அதன் ஆபத்து குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.
5. காயத்தை குணப்படுத்துதல்
அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்கு பிறகு கிவிப் பழங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதிலுள்ள இயற்கையான நொதிகள், பாக்டீரீயாவுக்கு எதிரான அம்சங்கள் காயத்தை விரைந்து குணப்படுத்த உதவும். தீக்காயங்கள், நீரழிவினால் ஏற்படும் கால் புண்கள் உள்ளவர்கள் கிவிப் பழங்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.