Walking Benefits: உயிரை காப்பாற்றும் நடைபயிற்சி.. வாய் பிளக்க வைக்கும் பயன்கள்!
Nov 12, 2023, 08:21 PM IST
நடைபயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் அபரிவித பயன்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் பெண்கள் தங்களது உடல் நிலையை உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சரிவர பராமரிப்பது இல்லை என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் நம் வீடுகளில் இனிப்பு வகைகள் உண்பது என்பது ஒரு வழக்கமான விஷயமாக இருக்கிறது.
இந்த இனிப்பு வகைகளை நாம் சாப்பிடும் போது, நம் உடலுக்கு பல்வேறு தொந்தரவுகள் வரும் என்றாலும், அந்த கண சந்தோஷத்திற்காக, பலரும் அந்த இனிப்பு வகைகளை உண்கிறார்கள். இது ஒரு சமூக வழக்கமாக மாறி இருக்கிறது. அதனை சில நேரங்களில் தவிர்த்தாலும், பெரும்பான்மையான நேரங்களில் அதனை நம்மால் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.
ஆனால் அதை அப்படி நாம் எளிதாகவும் கடந்து செல்ல முடியாது. பிறகு என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அந்த இனிப்பு வகைகளால், நம் உடலில் உருவாகும் கெட்ட கொழுப்புகளை கரைக்க நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். அதை கரைப்பதற்கான முயற்சி தான் வாக்கிங், ஜாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை நாம் மேற்கொள்வது.
ஏன் குறிப்பாக நடை பயிற்சியை இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்றால், அதற்கு காரணம் இருக்கிறது.
நடைபயிற்சி மேற்கொள்வதால் இதயம் சம்பந்தமான பல பிரச்சினைகள் வருவது தடுக்கப்படுகிறது. நம் உணவு பழக்க வழக்கங்களால் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு ஆகிய இரண்டுமே நாம் நம் உடலுக்குள் செல்லுகின்றன. நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது நமக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
நாம் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது, இந்த நல்ல கொழுப்புகள் அந்த கெட்ட கொழுப்புகளை கல்லீரலுக்கு கொண்டு சென்று விடும். அந்த கல்லீரல் அதனை காலி செய்துவிடும். இப்படி செய்யும் பொழுது இரத்த குழாயில் கொழுப்புகள் படிவதை நாம் குறைக்க முடியும்.
நாம் நடக்க நடக்க தான் எலும்புகள் வலிமையாகும். தசைகள் வலிமையாகும். எலும்புகளின் உறுதித் தன்மை பாதுகாக்கப்படும்
நம் எலும்புகளில் உள்ள கால்சியம் கரையாமல் இருப்பதற்கும், நம்முடைய எலும்புகள் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கும் நடைபயிற்சி உதவிகரமாக இருக்கிறது.
நம்முடைய மனது புத்துணர்ச்சியாக இருப்பதற்கும், மன ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
உடல் எடையை அதிகரிக்காமல் இருப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நடை பயிற்சி முக்கியமான பங்கை வகிக்கிறது.
உடலில் பேலன்ஸை சரிவர பராமரிப்பதற்கு நடைபயிற்சி முக்கியம். புற்றுநோய் போன்ற கொடூரமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதும் நடைபயிற்சி உதவும்.
டாபிக்ஸ்