15ஆவது நாளில் படுமோசமாக இறங்கிய வேட்டையன் வசூல்.. பதற்றத்தில் லைகா புரொடக்ஷன்.. இதுவரை எவ்வளவு வசூல்!
Oct 25, 2024, 10:50 AM IST
15ஆவது நாளில் படுமோசமாக இறங்கிய வேட்டையன் வசூல்.. பதற்றத்தில் லைகா புரொடக்ஷன்.. இதுவரை எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்பது பார்ப்போம்.
ஆமைவேகத்தில் நகரும் வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தால் தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மற்றும் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து வெளியான ’வேட்டையன்’. இந்த திரைப்படம் 15ஆவது நாளில் இந்தியா முழுவதும் ரூ.1.5 கோடி நிகர வசூலை ஈட்டியது. இந்த எண்ணிக்கை 14ஆவது நாளில் வசூலாக இருந்த ரூ.1.65 கோடி வருவாயுடன் ஒப்பிடும்போது 15 லட்ச ரூபாய் குறைவாகும்.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தசராவுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட கோலிவுட் திரைப்படம், வேட்டையன். இந்த திரைப்படம் முதல் வார இறுதியில் பெரும் வருவாயைக் கண்டது. இது வெளியான பிறகு முதல் சனிக்கிழமையில் ரூ.26.75 கோடியும், ஞாயிற்றுக்கிழமையில் ரூ.22.3 கோடியும் நிகர வருவாயையும் ஈட்டியது. இதனால் வேட்டையன் திரைப்படம் 10 நாட்களில் ரூ.129 கோடியை இந்திய அளவில் வசூல் செய்தது.
வேட்டையன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் ஏழு நாட்களில் சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் ரூ.122.15 கோடியை வசூலித்தது. ஆனால், இரண்டாவது வாரம் முதல் வசூல் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.
லைகா நிறுவனம் ரூ.300 கோடி வசூலை இலக்காகக் கொண்டிருந்தாலும், அது 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று தொழில்துறை டிராக்கர் இணையதளமான sacnilk தரவுகள் தெரிவிக்கின்றன.
பதற்றத்துடன் காணப்படும் லைகா தரப்பு:
இதுவரை 15 நாட்களில் மட்டும் இந்திய அளவில், வேட்டையன் திரைப்படம் ரூ.141.50 கோடி வரை வசூலித்துள்ளது. வேட்டையன் திரைப்படம் 15ஆவது நாளில் சென்னையில் 17.25 விழுக்காடு பார்வையாளர்களையும், பெங்களூருவில் 13 விழுக்காடு பார்வையாளர்களையும், மதுரையில் 19.25 விழுக்காடு பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. அதேபோல், கோவையில் 9.75 விழுக்காடு பார்வையாளர்களையும், பாண்டிச்சேரியில் 32.50 விழுக்காடு பார்வையாளர்களையும், திண்டுக்கல்லில் 11.50 விழுக்காடு பார்வையாளர்களையும், மும்பையில் 17.25 விழுக்காடு பார்வையாளர்களையும், டெல்லியில் 4.50 விழுக்காடு பார்வையாளர்களையும் பெற்றிருக்கிறது.
ஹைதராபாத்தில் 12.25 விழுக்காடு பார்வையாளர்களையும், குண்டூரில் 4 விழுக்காடு பார்வையாளர்களையும் விசாகப்பட்டினத்தில் 17.75 விழுக்காடு பார்வையாளர்களையும் 15ஆவது நாளில் வேட்டையன் பெற்றுள்ளது. இப்படி ஆமை வேகத்தில் நகரும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தால் தயாரிப்புதரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஏனெனில், லைகா புரொடக்ஷன்ஸ் இதற்கு முன்பு ரஜினியை வைத்து தயாரித்த தர்பார், லால் சலாம் ஆகியப் படங்கள் தோல்விப் படங்களாக அமைந்துவிட்டதால் தான் இந்த பதற்றத்திற்கு தயாரிப்புத் தரப்பு ஆளாகியிருக்கிறது.
வேட்டையன் படம் எத்தகையது?
ஜெய் பீம் படத்தில் ஒரு சீரியசான சப்ஜெக்ட்டை கையாண்ட பிறகு இயக்குநர் டி.ஜே.ஞானவேல், வேட்டையனில் ஒரு வித்தியாசமான கதையினை கையில் எடுத்து இருக்கிறார்.
வேட்டையன் திரைப்படத்தில் கதைக்களம் ஒரு என்கவுன்ட்டர் நிபுணரை மையமாகக் கொண்டுள்ளது. அவர் ஒரு கல்வி மோசடியை விசாரிக்கத்தொடங்கும்போது தொடர்ச்சியான சோதனைகளுக்கு ஆளாகிறார்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டையனில் இணைந்த அமிதாப் மற்றும் ரஜினி:
33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனை மீண்டும் பெரிய திரையில் ஒன்றிணைப்பதில் வேட்டையன் திரைப்படம் முக்கியப்பங்கு வகித்துள்ளது. வேட்டையன் படத்தின் முதல் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் கவனத்தை ஈர்க்கிறார். அதனைத் தொடர்ந்து வேட்டையன் படம் விரைவில், ஒரு வேகமான புலனாய்வு த்ரில்லராக மாறுகிறது.
ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் இணைந்து கடைசியாக 1991ஆம் ஆண்டு இந்தியில் வெளியான அதிரடி படமான ’ஹம் இல்’ சேர்ந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(சோர்ஸ்: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் Sacnilk இணையதளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன)
டாபிக்ஸ்