Actor Suresh: ‘80s-ன் சிவகார்த்திகேயன்.. அஜித்திற்கு டப்பிங் வாய்ஸ்..’ அன்றும் இன்றும் என்றும் ‘சுரேஷ்’
Apr 27, 2023, 07:30 AM IST
நடிகர் சுரேஷ் மிக மிக உயரமானவர். சுமார் ஆறு அடி உயரம். அதனால் டூயட் பாடும்போதெல்லாம் முழங்காலை லேசாக வளைத்தபடியே ஆடுவார். அதுவும் உயரம் குறைந்த நதியா, ரேவதி போன்றவர்களுடன் எல்லாம் அவர் நடித்தது வேற லெவல்.
80ஸ் பற்றி பேசினால், இவரை தவிர்த்து பேச முடியாது. 1980களில் வெளியான படங்களில் பெரும்பாலும் காதல் காவியங்கள்தான். அதனால் ரொமான்டிக் ஹீரோக்களும் அதிகம். அவர்களில் மோகனுக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்கவர் இவர். இன்றைய சிவகார்த்திகேயன், விமல் மாதிரி... அவர்தான் சுரேஷ்.
எடிட்டிங், டான்ஸ் இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தவர் சுரேஷ். நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்டும் கூட. ஆனால், நடிகராகி விட்டார். 1981ல் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' படம் தான் நடிகராக அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு பள்ளிக்கூட பிளஸ் டூ மாணவன் வேடம். அப்போது சுரேசுக்கு 20 வயது கூட ஆகவில்லை.
உண்மையில், பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படம் தான் இவரது அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், சந்தானபாரதி படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்டு விட்டதால், பாரதிராஜாவின் படத்தில் நடிக்கவில்லை. இதனால் தான், நவரச நாயகன் கார்த்திக்கை இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.
'பன்னீர் புஷ்பங்கள்' பட வெற்றிக்கு பிறகு அடுத்த ஆண்டே கங்கை அமரன் இயக்கத்தில் பிரபுவுடன் சுரேஷ் நடித்த 'கோழிகூவுது' செம ஹிட். தபால்காரர் ராமகிருஷ்ணனாக சுரேஷ் வருவார். அவருக்கு ஜோடி விஜி. பிரபுவுக்கு சில்க்ஸ்மிதா. அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படும் ரகம்.
அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காதல் நாயகனாக வலம் வந்தார் சுரேஷ். நதியா, ரேவதி... இவருடைய வெற்றி ஜோடிகள். 'உன்னை நான் சந்தித்தேன்', 'பூக்களை பறிக்காதீர்கள்', என இந்த ஜோடிகளின் ஹிட் படங்கள் ஏராளம்.
'வெண்ணிற ஆடை', 'காதலிக்க நேரமில்லை' படங்களின் பிரபல இயக்குநர் ஸ்ரீதர், இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தயங்கி நிராகரித்தார். ஆனால், 1985ல் அவரே 'உன்னைத் தேடி வருவேன்' படத்தில் சுரேஷை நடிக்க வைத்தார்.
நடிகர் சுரேஷ் மிக மிக உயரமானவர். சுமார் ஆறு அடி உயரம். அதனால் டூயட் பாடும்போதெல்லாம் முழங்காலை லேசாக வளைத்தபடியே ஆடுவார். அதுவும் உயரம் குறைந்த நதியா, ரேவதி போன்றவர்களுடன் எல்லாம் அவர் நடித்தது வேற லெவல். அதே நேரத்தில் 80ஸ்களில் டிரெண்டிங்கில் இருந்த டிஸ்கோ டான்சை மிக அருமையாக ஆடிய நடிகர்களில் சுரேஷும் முக்கியமானவர்.
'அபூர்வ சகோதரிகள்' படத்தில் "ரோஸி மை நேம் இஸ் ரோஸி...", "என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை..." பாடல்களை சொல்லலாம். அந்த படத்தில் சுரேஷுக்கு ஜோடி ஊர்வசி. நம்பவே முடியாத அளவில் 'முந்தானை முடிச்சி' ஊர்வசி செம்ம கிளாமரா நடிச்சிருப்பார். அந்த டிஸ்கோ நடன பாடல்களுக்கு இசை பப்பிலஹரி. இந்தி இசையமைப்பாளர். 1980களில் இளையராஜா உச்சத்தில் இருந்ததால் பிற மொழி இசையமைப்பாளர்கள் பலர் வந்தனர். ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரிலால், வரிசையில் பப்பிலஹரியும் ஒருவர்.
1980களில் துவங்கி தமிழில் சுமார் 100 படங்களில் சுரேஷ் நடித்திருக்கிறார். எல்லா படங்களுமே ரொமான்டிக் வேடமாவே வந்ததால் போரடித்து, 1990களின் துவக்கத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அங்கு வெரைட்டியான ரோல்களில் நடித்த சுரேஷ், அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 250க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். படங்களும் தயாரித்திருக்கிறார்.
நம்மில் பலரும் சுரேஷ் என்ற பெயரை நிறையவே கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஐந்து நண்பர்களாவது இருப்பார்கள். ஆனால், 2கே கிட்ஸுகளுக்கு இந்த சுரேஷ் பற்றி அதிகம் தகவல்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்கான தகவல் இது...
அஜித்தின் 'அசல்' படத்து வில்லன்... விஜயின் 'தலைவா' படத்தில் ஆஸ்திரேலிய ஓட்டல் ஓனர் கம் போலீஸ் அதிகாரி... இவரேதான்.
1990களில் தெலுங்கு பக்கமா போன சுரேஷ், சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின் தமிழுக்கு திரும்பி வில்லன், குணச்சித்திரம் என நடித்ததோடு சின்னத்திரைகளிலும் தலை காட்டி வருகிறார்.
பதிவின் ஆரம்பத்தில் சுரேஷை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என சொன்னோம் இல்லையா..? அதுதான் இந்த பதிவின் நிறைவு தகவல். 'ஆசை' படத்தில் அஜித் பேசும் குரல் இவருடையது தான். இதுபோல நாகார்ஜுனா நடித்து ஹிட்டான 'ரட்சகன்' போன்ற சில படங்களுக்கும் அவருக்கு குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்தான்.
-ரவீந்திரன் வைகுண்டன் பதிவு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்