Actor Vivek : மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உன்னத கலைஞர்.. விவேக் நினைவு தினம் இன்று!
Apr 17, 2024, 06:00 AM IST
Actor Vivek Memorial Day : மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உன்னத கலைஞர் விவேக் மறைந்த தினம் இன்று. இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.
நகைச்சுவை என்றால் மக்களை சிரிக்க வைப்பது மட்டுமல்ல சிந்திக்க வைப்பதும் தான் என்பதை உணர வைத்தவர் நடிகர் விவேக். இவர் தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார். சரி தவறு என்பதை தனது நகைச்சுவையில் சரியாக சொல்லி மக்களை சிந்திக்க வைப்பவர் நடிகர் விவேக்.
நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். அந்த அடைமொழிக்கு ஏற்ப மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகராக இருந்து வந்தார். இவர் மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி தான் சினிமா துறையில் நுழைந்தார். பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பொக்கிஷங்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.
விவேக்கின் முதல் படம் மனதில் உறுதி வேண்டும். இப்படத்தை பாலச்சந்தர் இயக்கியிருப்பார். இந்தப் படத்தில் அவர் விவேக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு மீண்டும் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்திலும் விவேக் நடித்தார்.
இந்தப் படத்தில் நடித்ததற்கு பிறகு விவேக்கிற்கு வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கியது. இவர் தான் பார்த்து வந்த வங்கி வேலையை விட்டு முழு நேர நடிகராக மாறினார். அன்றைய காலகட்டத்தில் அதாவது கவுண்டமணி செந்தில் இல்லாத படங்களில் விவேக் தான் நகைச்சுவை நாயகனாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது சுமார் 225 க்கும் மேற்பட்ட படங்களில் விவேக் நடித்துள்ளார்.
இவர் பெற்ற விருதுகளும் ஏராளம். அதாவது தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை ஐந்து முறை வென்றுள்ளார். அதேபோல கலைவாணர் விருதையும் வென்றுள்ளார். மூன்று முறை பிலிம்பேர் விருது வென்றுள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் இவர் பெற்றுள்ளார்.
இவர் நகைச்சுவை நாயகனாக மட்டும் அல்லாமல் பாலச்சந்தர் இயக்கிய மனதின் உறுதி வேண்டும் படத்தில் எழுத்துப் பணிகளை கவனித்துள்ளார். இவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். அதன்படி கலாம் சொன்னபடி தனது வாழ்நாள் லட்சியமாக மரங்களை நடும் முயற்சியை மேற்கொண்ட விவேக் சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் காமெடி நடிகனாக நடித்துள்ளார். அதேபோல பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார், அதேபோல ஒரு நாயகனாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த படம் தான் சொல்லி அடிப்பேன். ஆனால் இந்த படம் திரைக்கு வரவில்லை.
90களில் மூத்த ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்களுடன் இணைந்து காமெடியனாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் கமலஹாசன் உடன் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் அதுவும் இந்தியன் 2 படத்தின் மூலம் நடந்துள்ளது அப்படத்தில் இவர் கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு முழுமையாக இவரின் காட்சிகள் முடிவடைவதற்குள் இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் ஏஐ தொழில்நுட்ப மூலம் விவேக்கின் காட்சியை படமாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் கமல்-விவேக் காம்பினேஷனில் திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உன்னத கலைஞர் விவேக் மறைந்த தினம் இன்று. இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்