எங்க ஊரு பாட்டுக்காரன் முதல் எம்பி வரை! 80 களை நடிகராக கலக்கிய ராமராஜன் பிறந்தநாள்!
Oct 18, 2024, 07:00 AM IST
நடிகர் ராமராஜன் 1954 ஆம் ஆண்டு மதுரையின் மேலூரில் பிறந்தார். முதன் முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பின்னாளில் மக்கள் கொண்டாடும் மக்கள் நாயகனாக உருவெடுத்தார்.
அன்றாடம் வேலை செய்யும் எளிய மக்கள் அவர்களது களைப்பு தீர தெருக்கூத்து, நாடகங்கள் என பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் சினிமா உலகில் அறிமுகமான பின் அதுவே அனைத்து மக்களுக்குமான சிறந்த பொழுது போக்காக மாறிப் போனது. நடைமுறை வாழ்க்கையில் நடக்காத பிரம்மாண்டங்களை காட்டி வந்த சினிமா எளிய மனிதனுக்கு தூரமாகவே இருந்தது. ஆனால் அதனை எளிய மக்களுக்குமாய் மாற்றிய பெயர் பல கலைஞர்களுக்கு உண்டு. இளையராஜா தனது இசை வாயிலாக எளிய மக்களையும் நுட்பமான இசையை ரசிக்க வைத்தார். அவர் போன்று நம்மை போல ஒருத்தன் என்ற ஒரு சாயலில் வந்தவர் தான் நடிகர் ராமராஜன்.
நடிகர் ராமராஜன் 1954 ஆம் ஆண்டு மதுரையின் மேலூரில் பிறந்தார். முதன் முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பின்னாளில் மக்கள் கொண்டாடும் மக்கள் நாயகனாக உருவெடுத்தார். 1985 ஆம் ஆண்டு மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தை இயக்கியுள்ளார். பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தவர், நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ்நாட்டின் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானார். அதன் பின்னர் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான கரகாட்டக்காரன் ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
அலட்டல் இல்லாத ஹீரோ
அதிக மிடுக்கான உடைகள் தேவையில்லை. வீரமாக சண்டையிடத் தேவையில்லை. இவ்வளவு ஏன் காலம் காலமாக காளையை அடக்கி வந்த தமிழ் ஹீரோக்களுக்கு மாற்றாக பாடலின் வாயிலாகவே காளையை பணிய வைத்தார். 80 களின் முன்னணி ஹீரோக்களின் படங்களுடன் போட்டி போடக் கூடிய ஒரு படாக ராமராஜன் படமாக தான் இருந்தது. வெறும் டவுசர், ஒரு பனியன் மற்றும் கழுத்தில் ஒரு துண்டு இது தான் நம்ம ஹீரோ ராமராஜன் காஸ்டீயும் . தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்தின் செல்லப்பிள்ளையாகவே மாறி விட்டார் ராமராஜன்.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் “செண்பகமே செண்பகமே” பாடலில் இவரது நடிப்பே கிராமங்கள் தோறும் நம்மில் ஒருவனாக பார்க்க வைத்தது. மேலும் கரகாட்டக்காரன் படத்தில் கனகாவுடன் காதல், கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் நக்கல், நய்யாண்டி என படம் நெடுக ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு விட்டார். சொர்க்கமே என்றாலும் பாடலை இளையராஜாவின் குரலில் ராமராஜனின் குரலில் கேட்கும் போதே நாம் வாழும் ஊரின் நினைவுகள் நம்மை அறியாமல் நம்மூள் வந்து விடும். 80 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ராமராஜனின் படங்கள் வெளியாகிறது என்றால், கமல் மற்றும் ரஜினியின் படங்களையே வெளியீட தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவார்களாம்.
இவர் சிறிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்பு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையைப் பார்த்து வந்த ராமராஜன் அதே தியேட்டரில் அவரது படத்தை 100 நாட்கள் ஓட வைத்த பெருமை இவரையே சேரும்.
இசை நாயகன்
ராமராஜன் படங்களில் இசைஞானி இளையராஜா தவிர கங்கை அமரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், செளந்தர்யன், சிற்பி என்று யார் இசையமைத்தாலும் இனிமையான பாடல்களாகவே அமைந்து உள்ளன. இவரது படங்களின் வெற்றிகளுக்கு படத்தின் இசையும், அதன் பாடல்களுக்கு ராமராஜனின் நடிப்பும் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தன.
மக்கள் நாயகன் என்ற பட்டப்பெயருக்கு ஏற்றவாறு இவர் ஏற்ற பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் மக்களுடன் இவருக்கான நெருக்கத்தை அதிகரித்தது. மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து தமிழக குடும்பத்தில் ஒருவாராகவே மாறி விட்டார்.
அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திரைப்பட நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜன் 23 வருடங்களுக்கு பின்னர் சாமானியன் என்ற படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து 44 படங்கள் தனியாக கதாநாயகனாக நடித்திருந்த பெருமையை உடையவர் ராமராஜன். அவர் இன்று (அக்டோபர் 18 ) அவரது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மக்கள் நாயகனுக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்