Saala Movie: வட சென்னை பின்னணி, டாஸ்மாக் பாருக்காக மோதல்..! மதுவுக்கு எதிரான கருத்தை சொல்லும் சாலா
Aug 07, 2024, 08:52 PM IST
வட சென்னை பின்னணியில், டாஸ்மாக் பாருக்காக மோதல் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் சாலா படத்தின் டரெய்லரை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டார். மதுவுக்கு எதிரான கருத்தை சொல்லும் படமாக சாலா உருவாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, 'சாலா' எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. டி.ஜி. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
வட சென்னை பின்னணி கதை
வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்துக்காக இரண்டு பெரும் துருவங்களின் மோதலும், அதனால் ஏற்படும் திருப்பங்களும் விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது சாலா படம்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, 'சாலா' டிரெய்லர், தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, உலகெங்கும் சாலா திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சாலா படத்தின் நடிகர்கள்
'சாலா' படத்தில் தீரன் அறிமுக ஹீரோவாகவும், ரேஷ்மா வெங்கடேசன் அறிமுக ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள். 'மெட்ராஸ்' பட புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'சாலா' படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
காரமும் சாரமும் குறையாமல் இருக்கும்
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் சாலா படத்தை இயக்கியிருக்கும் மணிபால் இயக்குநர் பிரபு சாலமனின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், "வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் (பார்) தான் 'சாலா' படத்தின் மையக்கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம். டாஸ்மாக் பாருக்கு பின்னாடி இருக்கும் அரசியலையும் இந்த கதையில் பேசியிருக்கிறேன்
மதுரை நந்தின் இன்ஸ்பிரேஷனில் ஹீரோயின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். மதுவுக்கு எதிரான கருத்தை க்ளைமாக்ஸில் சொல்லியிருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, "வட சென்னை எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களது வாழ்க்கை குறித்தும் சினிமாவில் பதிவு செய்ய வேன்டும் என்ற ஆசை எனது முதல் படத்திலேயே நிறைவேறியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களாலும் 'சாலா' பாராட்டப்படும் என நம்புகிறேன்," என்றார்.
சாலா டெக்னீஷியன்கள்
'சாலா' திரைப்படத்துக்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வி. ஸ்ரீ நடராஜும், நிர்வாக தயாரிப்பாளராக விஜயா ராஜேஷும் பங்காற்றியுள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார்.
கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்க, படத்தொகுப்பை புவன், சண்டை பயிற்சியை மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர் ராம், நடன இயக்கத்தை நோபுள் கையாண்டுள்ளனர். சவுண்ட் மிக்ஸிங்: லட்சுமி நாராயணன். அந்தோணி தாசன் மற்றும் சைந்தவி பாடல்களை பாடியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்