Bhama Rukmani: பாக்யராஜூடன் ஜோடியாக நடித்த அவரது முதல் மனைவி பிரவீணா.. இரு மனைவியைக் கட்டிய கணவரின் கதை ‘பாமா ருக்மணி’!
Jun 12, 2024, 10:44 AM IST
Bhama Rukmani: இரு மனைவியைக் கட்டிய கணவரின் கதை,’பாமா ருக்மணி’. இப்படத்தில் பாக்யராஜூடன் ஜோடியாக நடித்த அவரது முதல் மனைவி பிரவீணா நடித்திருக்கிறார்.
Bhama Rukmani: 1980ஆம் ஆண்டு பாக்யராஜ் எழுதி, நடித்து, ஆர். பாஸ்கரன் என்பவர் இயக்கிய திரைப்படம் தான், பாமா ருக்மணி. இப்படத்தில் பாக்யராஜ், ராதிகா, பிரவீணா, நாகேஷ், கே.ஏ.தங்கவேலு, காந்திமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காமெடி பாணியில் எடுக்கப்பட்டு, 1980ஆம் ஆண்டு, ஜூன் 12ஆம் தேதி ரிலீஸானது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவினை கண்ணன் நாராயணன் செய்துள்ளார். இயக்குநர் ஆர். பாஸ்கரனே இப்படத்தை எடிட்டிங்கும் செய்துள்ளார். இப்படத்தினை ஸ்ரீ காமாட்சி அம்மன் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘பவித்ரம்’கே.சுந்தர்ராஜ் தயாரித்து இருந்தார்.
பாமா ருக்மணி திரைப்படத்தின் கதை என்ன?:
படத்தில் கதையின் நாயகனின் பெயர், நந்த கோபால். நந்தகோபால்,பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ருக்மணி என்னும் இளம்பெண்ணைக் காதலித்து வருகிறார். ஆனால், நந்தகோபாலின் தாய், தனது மகன் பாமா என்னும் உறவுக்காரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என மகனிடம் கூறுகின்றார்.அப்போது, நந்தகோபால், தனது பள்ளிக்காலத்தில் ருக்மணியுடனான காதல் பற்றி தெரிவிக்கிறார். ஆனால், நந்தகோபாலின் தாய், பாமாவின் அப்பா எழுமலை செய்த உதவிகளை எடுத்துக் கூறுகிறார். அந்த நன்றிக் கடனுக்காகத் தான், நந்தகோபாலை எழுமலையிடம் பணிக்கு அனுப்பியதாகவும் கூறுகிறார். மேலும், பாமாவை மணம் முடிக்கவில்லையென்றால், தான் தன் உயிரை மாய்த்துக்கொள்வதாக, நந்தகோபாலின் தாயார், அவரிடம் மிரட்டுகின்றார். இதனால், வேறு வழியின்றி, குற்றவுணர்ச்சியுடன் நந்தகோபால் பாமாவை மணம்முடித்துக்கொள்கிறார். நந்தகோபால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஏமாற்றிவிட்டதை உணர்ந்த ருக்குமணியும் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ள முயற்சிகள் எடுக்கிறார். இதனை அறிந்து அங்குசெல்லும் நந்தகோபால், மன்னிப்புக்கேட்டு ருக்குமணியையும் திருமணம் செய்துகொள்கிறார். அதன்பின், இரண்டு குடும்பங்களிலும் நந்தகோபாலின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது. நந்தகோபாலுக்கு இருமனைவிகள் என்பது அம்பலமாகிறது. அதன்பின், இரு மனைவிமார்களின் குடும்பமும் நந்தகோபாலை ஏற்றுக்கொள்ளாததால் நடுத்தெருவுக்கு வருகிறார், நந்தகோபால். அதன்பின், நந்தகோபால் தனது நண்பர் வழக்கறிஞர் சேஷாத்திரியை சந்தித்து, நடந்தவற்றைக் கூறி, பிரச்னைக்குத் தீர்வு காணமுயற்சிக்கிறார். அதன்பின் சேஷாத்திரி என்கிற சேசு, வெளிநாடுகளில் இரண்டு மனைவிகளை கட்டிக்கொண்டவர்கள் செய்த சமாளிப்புத் திட்டங்களை எடுத்து, நந்தகோபாலுக்குத் திட்டங்கள் தீட்டிக் கொடுக்கிறார். இறுதியில், அனைத்து திட்டங்களும் மொக்கையாகி மாட்டிக்கொண்டு, நந்தகோபால் அடிமேல் அடி வாங்குவதை, நகைச்சுவையாகச் சொன்னால், அதுதான் பாமா ருக்மணி திரைப்படம்.
பாமா ருக்மணி படத்தில் நடித்தவர்களின் விவரம்:
இப்படத்தில் நந்தகோபாலாக கே. பாக்யராஜூம், பாமாவாக ராதிகாவும், ருக்மணியாக பிரவீணா பாக்யராஜூம் நடித்து இருந்தனர். இப்படத்தில் சேஷாத்திரி வேடத்தில் நாகேஷ் நடித்துள்ளார். மேலும், எழுமலை கதாபாத்திரத்தில் கே.ஏ.தங்கவேலுவும், ஆண்டாள் கதாபாத்திரத்தில் காந்திமதியும் நடித்திருந்தார். மேலும், கல்லாபெட்டி சிங்காரம், உசிலை மணி, மெளன குரு கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், கேபரெட் நடிகையாக ஜெயமாலாவும் நடித்துள்ளனர். மேலும், லட்சுமி நாராயண், சந்திரன் பாபு, சுந்தரி பாய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை பங்களிப்பு:
இப்படத்திற்கான இசையை எம்.எஸ்.விஸ்வநாதன் செய்துள்ளார். இப்படத்துக்குண்டான பாடல்களை முத்துலிங்கம் மற்றும் சிதம்பரம் செய்துள்ளார்.
எப்போதும் கே.பாக்யராஜ் படத்தின் ரசிகர்களாக இருக்கும் மக்களுக்கு, இப்படமும் பிடிக்கும். கூடுதலாக, இப்படத்தில் இருக்கும் காமெடி, பலரையும் கவர்ந்து, படமும் சூப்பர் ஹிட்டானது.
டாபிக்ஸ்