13 Years Of Theneer Viduthi: மினிமம் பட்ஜெட்டில் ஈர்த்த ஜனரஞ்சக காதல் கதை ‘தேநீர் விடுதி’
Jul 01, 2024, 11:51 AM IST
13 Years Of Theneer Viduthi: மினிமம் பட்ஜெட்டில் ஈர்த்த ஜனரஞ்சக காதல் கதை ‘தேநீர் விடுதி’ திரைப்படம் வெளியாகி 13ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
13 Years Of Theneer Viduthi: களவாணி திரைப்படம் வெளிவந்தபின், எண்ணற்ற கிராமம் சார்ந்த காதல் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. அதில் பெரும்பாலும் ஹீரோ, ஊரில் ஊதாரியாக ஊர்சுற்றி இறுதியில் தான் விரும்பிய பெண்ணை மணமுடிப்பார். இடையில் அப்படம் கலகலப்பாக இருக்கும். அதே ஒரு பாணியில் எடுக்கப்பட்ட படம் தான், தேநீர் விடுதி. ‘பூ’, ‘களவாணி’ ஆகியப் படங்களுக்கு இசை அமைத்த எஸ். எஸ். குமரன் எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம், தேநீர் விடுதி. இப்படத்தில் ஆதித் அருண், ரேஷ்மி மேனன், பிரபாகர், கொடுமுடி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 1ஆம் தேதி 2011ஆம் ஆண்டு வெளியாகி, ஜனரஞ்சகமான படம் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி 13ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்துள்ளநிலையில் படம் குறித்த சுவாரஸ்யமான விசயங்களை அறிந்துகொள்ளலாம்.
தேநீர் விடுதி திரைப்படத்தின் கதை என்ன?:
தேநீர் விடுதி திரைப்படத்தின் கதைக்களம் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர். படத்தில் ஓப்பனிங்கிலேயே ஒரு பெண் இறந்ததுபோல் காட்டப்படுகிறது. எல்லோரும் அழுதுகொண்டு இருக்க திடீரென உயிர்த்து எழும் அந்த பெண், ’’தான் இறந்தால் யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னீயே தம்பி, இப்போது எவ்வளவு பேர் வந்துள்ளார்கள் என்று பார்த்தாயா’’ என்று தனது தம்பியிடன் பேசுகிறார். அதன்பின், ’’தன் மகன்களுக்கு என்ன குறைச்சல்’’ என்கிறார். உடனே, அவரின் தம்பி, தன் மகளின் ஜாதக நோட்டைத் தருவதாக ஒப்புக்கொள்கிறார். இப்படி தொடங்குகிறது, இந்தப் படம். ஆரம்பமே படம் காமெடியைப் பின்னணியைக் கொண்டது என்பதை சொல்லும் காட்சி இது. அதன்பின், அந்தப்பெண்ணுக்கு கல்யாண வயதில் இரு மகன்கள். அந்த இருவரும் சேர்ந்து ’பந்தல் ராஜா பிரதர்ஸ்’ என்ற பந்தல் அலங்காரப் பணியினை செய்து வருகின்றனர். பந்தல் ராஜா சகோதரரில் மூத்தவருக்குத்தான், மாமன் மகளின் ஜாதகம் கொடுக்கப்படுகிறது. அதில் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் தம்பிக்கு முதலில் திருமணம் நடந்தால் தான், அண்ணனுக்குத் திருமணம் நடக்கும் எனக் கூறி விடுகின்றனர். இதனால், பந்தல் ராஜா சகோதரரில் மூத்தவர் தனது தம்பியை விரைந்து கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார்.
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ‘தேநீர் விடுதி’ என்னும் கடைக்குச் செல்லும் ’பந்தல் ராஜா பிரதர்ஸ்’ -களில் இளையவரான தம்பி குமரன், அந்த கடைக்கு எதிரில் மளிகைக் கடையில் தனது அண்ணனுக்காக உதவி செய்துகொண்டிருக்கும் வள்ளியைப் பார்த்ததும் சைட் அடிக்கத் தொடங்குகிறார். ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதலைப் புரிய வைத்துவிடுகிறார். வள்ளியும் குமரனின் அலப்பறைகள் மற்றும் காமெடியில் ஈர்க்கப்பட்டு, அவரை காதலிக்கிறார்.
வள்ளியின் தந்தை நாச்சியப்பன், அவ்வூரில் சார்பதிவாளராக இருக்கிறார். வள்ளிக்கு ஒரு அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர் மூத்தவர்களாக உள்ளனர். அம்மா கிடையாது. வள்ளியின் அண்ணன் தான் மளிகைக் கடை வைத்திருப்பவர்.
ஒரு கட்டத்தில் வள்ளியின் அக்காவின் வளைகாப்புக்கு பந்தல்போடும் காண்டிராக்ட்டை தன் காதலனுக்கு வாங்கிக் கொடுக்கிறார், வள்ளி. அங்கு நடக்கும் சில சம்பவங்களால், வள்ளி மற்றும் குமரனின் காதல் ஊருக்குத் தெரிந்துவிடுகிறது. இது எல்லாம் தெரிந்து, தனது மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை ஒருவரை ரகசியமாக மணமுடிக்கப்பேசி வருகிறார், நாச்சியப்பன்.
இருந்தாலும், தன் மகளின் திருமணத்துக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, நாச்சியப்பன், குமரனின் அம்மாவை பார்த்து உள்ளதைச் சொல்லி, காலில் விழுந்து, தங்கள் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும்படி கெஞ்சுகிறார்.
இதுதெரியாமல் காதல் திருமணம் செய்ய வீட்டை விட்டு திடீரென சென்ற வள்ளிக்கு, மணமகன் குமரன் சொன்னநேரத்துக்கு, சொன்ன இடத்துக்கு வராத நிலையினால், ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வந்து குமரனை தலைமுழுகி மறக்க நினைக்கிறார். இறுதியின் தன் தந்தையின் திருகு வேலைகள் வள்ளிக்குத் தெரியவருகிறது.
அதன்பின்,சார்பதிவாளர் பணியை செய்துகொண்டு வரும் நாச்சியப்பன், தனக்குப் பிடிக்காத நபர் ஒருவரை சந்திக்க மறுத்து, அங்கு கூடியிருந்த பல ஜோடிகளுக்கு என்ன ஏது என்று பார்க்காமல், திருமணச் சான்றிதழ் பதிந்து தருகிறார். அப்போது திருமணச் சான்றிதழ் பதிந்த ஜோடிகள், சார் பதிவாளரிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். அப்போதுதான் தெரிகிறது, தன் மகள் வள்ளிக்கு அவள் காதலித்த குமரனுடன் கல்யாணம் ஆனது பற்றி. இதனால், அறைக்குள் சென்று குடிக்கும் நாச்சியப்பன் என்ன செய்தார் என்பதே அந்த கலகலப்பான கிளைமேக்ஸ்!
தேநீர் விடுதி திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
தேநீர் விடுதி திரைப்படத்தில் குமரனாக ஆதித் அருணும், வள்ளியாக ரேஷ்மி மேனனும் நடித்திருந்தனர். வள்ளியின் தந்தையாக பிரபாகரும், குமரனின் அண்ணனாக கொடுமுடியும் நடித்திருந்தனர். இப்படத்தில் ‘தேநீர் விடுதி’ என்னும் கடையை நடத்தி, ’ரேஷ்மி மேனனை’ ஒன் சைடாக லவ் செய்யும் காமெடி கேரக்டரில் காளி வெங்கட் நடித்திருப்பார்.
மிகக்குறைவான கதாபாத்திரங்களில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘தேநீர் விடுதி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இதனை இன்று டிவியில் போட்டாலும் ஒரு முறை ரசிக்கலாம்!
டாபிக்ஸ்