Sexual Complaint: இனி பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை.. நடிகர் சங்கம் தீர்மானம்!
Sep 05, 2024, 07:33 PM IST
Sexual Complaint: தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Sexual Complaint: திரைப்படத் துறையில் பாலியல் புகார் உறுதியானால் அத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்யும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தி.நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று (04.09.2024) காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ , லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
2. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ - மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை
மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. பல நடிகைகளுக்கு, நடிகர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்