Sirf Ek Banda Kafi Hai Review: ‘பெருங்குற்றம்.. தப்பிக்க போலி சிகிச்சை.. அதிகாரமா? ஜனநாயகமா?’
Jul 06, 2023, 12:26 PM IST
நீதிமன்ற காட்சிகளை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது, அதிலிருந்து இது மாறுபடவில்லை என்றாலும், களம் மாறுபட்டிருக்கிறது.
தலைப்பை பார்த்ததும் சககால அரசியலோடு நீங்கள் உடன்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. படத்தில் இருக்கும் கதைக்குள் வருவோம்.. அது உங்களை சமகால அரசியலோடு இணைக்கலாம்.
பிரபல சாமியார் ஒருவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார். அந்த சிறிமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறையிடுகிறார்கள். போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து, பிரபல சாமியாரை கைது செய்கிறார்கள்.
சிறுமிக்கு ஆஜராகும் வழக்கறிஞர், அந்த வழக்கை வைத்து பெருந்தொகை பார்க்க பார்க்கிறார். அதை அறிந்த சிறுமியின் தந்தை, போலீசாரிடம் அது குறித்து தெரிவிக்க, போலீசாரின் பரிந்துரையில் நியாயமான ஒரு வழக்கறிஞரிடத்தில் செல்கிறது அந்த வழக்கு.
பணம் படைத்த சாமியாரின் பின்னணி, பிரபல வழக்கறிஞர்கள் பலரையும் களமிறக்கி, எப்படியாவது சாமியாருக்கு ஜாமின் வாங்க முயற்சிக்கிறது. அத்தனை முயற்சிகளையம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் சட்டத்தின் பாதையில் உடைக்கிறார். சாமியார் மீது போடப்பட்ட போக்சோ சட்டத்தை ரத்து செய்ய வைக்க பெரும் முயற்சியை ஏடுக்கிறது சாமியார் தரப்பு.
அதற்காக சிறுமியை மேஜர் என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். சர்வ அதிகாரம் படைத்த அந்த சாமியாருக்கு பல துறைகள் உதவுகின்றன. ஆனால், அதையும் அந்த வழக்கறிஞர் முறியடிக்கிறார். இறுதியில் சாமியாருக்கு உடல் நலக்கோளாறு இருப்பதாகவும், அவரை உடனே அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று புதிய அஸ்திரத்துடன் வருகிறார்கள்.
சாமியாரின் உடல் நலனில் எந்த கோளாறும் இல்லை, அவர் அதற்கு முன் அப்படி எந்த ஒரு சிகிச்சையும் எடுக்கவில்லை, அப்படியே சிகிச்சை தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவர்களை வைத்து எடுக்கலாம் என்கிற வாதத்தை வைக்கும் சிறுமியின் வழக்கறிஞர், சாமியாரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி , வழக்கறிஞர் சமர்பித்த மருத்துவ அறிக்கைகள் போலி என்பதை நிபிக்கிறார்.
இறுதியில் சாமியாருக்காக அபத்தமான ஒரு வாதத்தை அவரது வழக்கறிஞர் முன் வைக்கிறார். ‘சாமியாருக்கு தண்டனை வழங்கப்பட்டால், அவர் நடத்தும் பள்ளி, கல்லூரி, மருத்துவம், சேவைகள் அனைத்தும் பிறருக்கு கிடைக்காமல் போய்விடும், எனவே அவரை தண்டிக்க கூடாது’ என்று வாதிடுகிறார்.
அழகாக ஒரு சிவன் கதையை கூறி, சாமியாரின் வாதங்களை ஒரே அடியாக நொறுக்கி ஆயுள் தண்டனை வாங்கித் தருகிறார் சிறுமியின வழக்கறிஞர். இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை. இதில் வில்லனாக சாமியார் காட்டப்படுகிறார். ஆனால் சம காலத்தில், அதிகாரம் படைத்த அத்தனை பேரும் தங்களை பாதுகாக்க எந்த லெவலுக்கு போவார்கள்? என்னவெல்லாம் செய்வார்கள்? என்பதை தோலுறித்து காட்டியுள்ளது இந்த படம்.
Sirf Ek Banda Kafi Hai இந்தியில் எடுக்கப்பட்டாலும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு, ஜி5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. சிறுமியின் வழக்கறிஞராக வரும் மனோஜ் பாஜ்பேவின் நடிப்பு அபாரம். வழக்கறிஞராக சீறும் போதும், தனக்கு அச்சுறுத்தல் வரும் போது சாமானியாக நடுங்கும் போதும், கதாபாத்திரமாகிறார்.
சாமியாராக நடித்துள்ள சூர்யாமோகன் குல்ஷேஷ்திரா, அப்படியே சாமியாரை கண் முன் கொண்டு வருகிறார். சிறுமியாக நடித்த அட்ரிஜா சின்காவின் நடிப்பும், பாராட்டும் படியாக உள்ளது. தீபக் கிங்ரானியின் எழுத்தும், அபூர் சிங் கார்கியின் இயக்கமும் அதிகாரம், ஆணவம், போலி நம்பிக்கை ஆகியவற்றை தோலுறித்து காட்டுகின்றன. குறிப்பாக வசனங்கள், பட்டை தீட்டிய வைரங்கள்.
அர்ஜூன் குக்ரேட்டியின் ஒளிப்பதிவும், சங்கீத்-சித்தார்த்ராவ் இசையும் படத்திற்கு பெரிய பலம். நீதிமன்ற காட்சிகளை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது, அதிலிருந்து இது மாறுபடவில்லை என்றாலும், களம் மாறுபட்டிருக்கிறது.
டாபிக்ஸ்