Yai! Nee Romba Azhaga Irukey: 5 இசையமைப்பாளர்கள், விவேக்கின் காமெடி கலாட்டா! உண்மை காதல் பற்றி ஜாலியாக பாடம் எடுத்த படம்
Jul 13, 2024, 07:15 AM IST
ஒரு படத்தில் 5 இசையமைப்பாளர்கள், விவேக்கின் காமெடி கலாட்டா, இளைஞர்களை கவரும் விதமாக உண்மை காதல் பற்றி ஜாலியாக பாடம் எடுத்த படமாக ஷாம் - சிநேகா நடித்த ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படம் ரசிக்க வைத்தது.
காதல், காதல் தோற்றால் சாதல் என்று இருக்கும் இளைஞர்களுக்கு காதலை கடந்து வாழ்க்கைய வாழும் மெசேஜ் சொன்ன படம் தான் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே திரைப்படம். ஷாம், சிநேகா, விவேக், ஜெயாரே, ராஜிவ் கிருஷ்ணா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வசந்த் இயக்கியிருப்பார்.
காதல், காமெடி கலந்த மியூசிக்கல் ரொமாண்டிக் பாணி படமாக உருவாகியிருந்த இந்த படம் வெளியான காலகட்டத்தில் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
உண்மை காதல் குறித்த மெசேஜ்
சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வரும் ஷாம், அவரது முறைப்பெண் சிநேகாவிடம் நட்பாக பழகி வருகிறார். பின்னர் அது காதலாக மாற அவரிடம் புரொபோஸ் செய்கிறார். ஆனால் சிநேகா காதலை மறுக்கிறார்.
சிநேகாவுக்கு வேறொரு மாப்பிள்ளை தேடும் படலமும் நடக்க, இறுதியில் ஷாம் காதலை சிநேகா ஏற்றுக்கொண்டாரா என்பது தான் படத்தின் கதை.
இந்த மெயின் ஸ்டிரீம் கதையுடன் ஷாமின் தோழியாக வரும் ஜெயரே அவரை காதிலிப்பதாக சொல்லி செய்யும் குழப்பம், சிநேகாவின் நண்பனாக வரும் ராஜீவ் கிருஷ்ணா ஏற்படுத்தும் திருப்பம் என்று திரைக்கதையில் சுவாரஸ்யங்களும் இடம்பிடித்திருக்கும்.
இயக்குநர் வசந்த படங்கள் என்றாலே மிடில் கிளாஸ் வாழ்க்கை அபட்டமாக பிரதிபலிக்கும் விதமாகவும், குடும்பத்துடன் பார்க்ககூடிய பேமிலி எண்டர்டெயினராகவும் இருக்கும். தனது பாணியை இந்த படத்திலும் அப்படியே கையாண்டிருப்பதோடு, காதல் தோல்வியை காதலித்த பெண் மீது வஞ்சத்தை வெளிப்படுத்துவது, தனது உயிரை மாய்த்துக்கொண்டு தற்கொலை செய்வது போன்ற விஷயங்களுக்கு எதிராகவும், உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், காதல் பிரிவை ஏற்றுக்கொள்வது பற்றியும் மெசேஜ் சொல்லியிருப்பார் இயக்குநர் வசந்த்.
விவேக் காமெடி
மிகவும் எதார்த்தமாக செல்லும் படத்தின் திரைக்கதையில் விவேக் காமெடி ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும். விவேக், 23சி பஸ் இங்க வருமான்னு சொல்லிட்டு பஸ் ஸ்டாப்பை விட்டு தள்ளி நின்னு, பஸ்ஸில் ஏறும் காமெடி காட்சி இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. அதேபோல் காபியை வைத்து ஒரு காமெடி காட்சி, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும்.
ஐந்து பேர் இசை
இந்த படத்தில் மொத்தம் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பார்கள். பா. விஜய், பழநிபாரதி, தாமரை ஆகியோர் பாடல் வரிகள் எழுதியிருப்பார்கள். பின்னணி பாடகர் சீனிவாஸ், ரமேஷ் விநாயகம், ராகவ், முருகன், அரவிந்த் ஷங்கர் ஆகியோர் இசையமைத்திருப்பார்கள்.
இனி நானும் நானில்லை, காதல் வந்துச்சோ, தொட்டு தொட்டு போன்ற பாடல்கள் அந்த காலகட்டத்தில் ரிப்பீட் மோடில் எஃப்எம்களில் ஒலித்தன. இதில் தொட்டு தொட்டு பாடல் சிரீயாவில் இருக்கும் பல்மைராவின் பழங்கால இடிபாடுகளில் பாடமாக்கப்பட்டது. இந்த இடத்தில் ஷூட்டிங் செய்யப்பட்ட கடைசி தமிழ் படமாக உள்ளது.
கலவை விமர்சனம்
ஜாலி, சோகம் என கலந்து செல்லும் படத்தின் திரைக்கதை இளைஞர்களை கவரும் விதமாகவும், இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாகவும் இருக்கும். தமிழில் வெளியான காதல் படங்களில் அண்டர் ரேட்டட் படமாகவும், பீல் குட் காதல் படமாக இருக்கும் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்