Sathya Jyothi Films: ‘அஜித்தும் ரஜினியும் ஒரே மாதிரி தான்’ சத்யஜோதி தியாகராஜன்!
Feb 19, 2023, 06:30 AM IST
விஸ்வாசம் படம், பேட்டை படத்தை விட தமிழகத்தில் 25 சதவீதம் கூடுதல் வசூல் செய்தது. அஜித் ஒரு கதையில் கமிட் ஆகிவிட்டால், முழு ஒத்துழைப்பு தருவார்.
சத்யா மூவிஸில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் ,சத்யஜோதி மூவிஸ் நிறுவனம் மூலம் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் முன்பு அளித்த பேட்டி, தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த பேட்டி:
‘‘நிறைய கார்ப்ரேட்டுகளுக்கு ப்லிம்ஸ் பண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, இயக்குனர்கள் கரு.பழனியப்பன், தரணி எல்லாரும் என அந்த ப்லிம்களை செய்து கொடுத்தார்கள். அப்போது கரு.பழனிப்பன் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் வந்தது.
அவரே வந்து ஒரு நாள் , ‘சார் விளம்பரம் கொடுக்குறீங்க, ஒரு படம் கொடுங்க’ என்று கேட்டார். ‘நல்ல கதையோடு வாப்பா…’ என்று நான் கூறினேன். ஒருநாள் வந்து பார்த்திபன் கனவு படத்தின் கதையை சொன்னார். என்னிடம் சொன்னதை விட சிறப்பாக அந்த படத்தை எடுத்தார். '
அதே போல் தான், என் மனைவியோடு சேர்ந்து மெட்டி ஒலி சீரியலை பார்த்து, நான் அதற்கு அடிமையானேன். ஒருமுறை இயக்குனர் திருமுருகனை பார்த்து, ‘நீங்க நல்ல கதை கொண்டு வந்தால், உங்களை வைத்து சினிமா எடுக்கிறேன்’ என்று கூறினேன். கதை ரெடி பண்ணிட்டு என்னிடம் வந்து கூறினார். என்ன சொன்னாரோ, அதை அப்படியே எடுத்தார். அது தான் எம்டன் மகன்.
நான் சத்யா மூவிஸ் படங்களும் செய்து கொண்டிருந்ததால், சத்யஜோதியில் படங்கள் செய்வதில் கொஞ்சம் கொஞ்சம் தாமதம் ஆனது. மூன்றாம் பிறை படம் எடுக்கும் போது, கமல் அப்படி நடிப்பார் என்று நானும், பாலுமகேந்திராவும் நினைக்கவே இல்லை. ரயில் நிலையத்தில் ஓடி வந்து மின்கம்பத்தில் இடிக்கும் காட்சி, நாங்கள் முடிவு செய்யவில்லை. கமல் தானாக செய்தார்.
கமல் மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. அவ்வளவு டான்ஸ் , சண்டை பண்ணுவார். மூன்றாம் பிறைக்கு பின் கமல் சாருடன் சத்யஜோதி படங்கள் பண்ணவில்லை. சத்யா மூவிஸில் இருந்ததால் தனியாக அதற்கு அவரை தொடர்பு கொள்ளவில்லை.
தொடரி படத்தில் கிராபிக்ஸில் காட்டிய ஆர்வத்தை மெயின் ஸ்கிரிப்டில் விட்டுவிட்டார் பிரபு சாலமன். நாங்கள் முழு படம் எடுத்த பின் எடிட் வெர்சன் நான் பார்ப்பேன். அந்த படத்தை நான் பார்க்க முடியவில்லை. அதற்குள் ரிலீஸ் தேதி முடிவாகி வெளிவந்து, சுமாராக தான் போனது.
ஏவிஎம்., நிறுவனத்திற்கு திருப்பதி படம் பண்ணும் போது என்னையும், என்னுடைய இரண்டாவது மகன் அர்ஜூனையும் ஒரு நாள் அஜித் சார் அழைத்தார். அடையார் ஓட்டலில் அவரை சந்தித்தோம். அவர் தான் ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். நீண்ட நாள் அப்புறம் திடீர்னு மீண்டும் அழைத்தார், அவர் வீட்டுக்கு போனோம். அடுத்த படம் சத்யஜோதிக்கு பண்றேன் என்றார். சிவா தான் இயக்குனர் என விவேகம் எடுத்தோம்.
அந்த படம் முடிந்ததும், அதே கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி படத்தை செய்து தர வேண்டும் என்று விஸ்வாசம் படம் தயாரிக்கும் வாய்ப்பை தந்தார். எதிர்பார்க்காத அளவிற்கு அது பெரிய ஹிட். அஜித் சார் அடிப்படையில் சரியான தொழில்முறை கலைஞர்.
அஜித் முகம் சுழிக்காமல் சரியாக ஒத்துழைப்பு தருவார். ஷூட்டிங் வந்துவிட்டால், தேவையற்ற விவகாரம் எதையும் செய்ய மாட்டார். கேரவேன் கூட போகமாட்டார். ஸ்பாட்டில் நின்று கொண்டு, எப்போது அழைத்தாலும் வருவார். அனைத்து நடிகர்களையும் மதிப்பார்.
சிவா என்ன பண்ணுவார், முன்னாடியே ஷூட் ரெடிபண்ணிடுவார். அது முடியும் வரை ஸ்பாட்டில் அஜித் காத்திருப்பார். இதே மாதிரி தான் ரஜினி சார். தங்க மகன் படம் எடுக்கும் போது, மனோரமா காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். ரஜினி சார் வந்ததும் , அவர் காட்சி எடுக்க முயற்சித்தோம். ‘வேண்டாம்… வேண்டாம், அவங்க சீனியர், அவங்க ஷூட் எடுங்க’ என காத்திருந்தார். அஜித்தும் அப்படி தான்.
கதையில் முதல் முறை கேட்பதோடு சரி, அஜித் அதன் பின் கதையில் தலையிட மாட்டார். விஸ்வாசம் படம், பேட்டை படத்தை விட தமிழகத்தில் 25 சதவீதம் கூடுதல் வசூல் செய்தது. அஜித் ஒரு கதையில் கமிட் ஆகிவிட்டால், முழு ஒத்துழைப்பு தருவார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போது, அதில் என்ன குறை என்பதை ஆராய்வார்,’’
என்று தியாகராஜன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.