16 Years of Subramaniapuram: நட்பு,காதல், துரோகம்! 80ஸ் காலகட்டத்தை காட்சியில் மட்டுமல்லாமல் கதையிலும் கொண்டு வந்த படம்
Jul 04, 2024, 02:25 PM IST
80ஸ் காலகட்டத்தை காட்சியில் மட்டுமல்லாமல் கதையில் கொண்டு வந்த சுப்ரமணியபுரம் படம் நட்பு, காதல், சுயநலம், துரோகம் போன்ற உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகி ரசிகர்களையும் கவர்ந்தது.
நட்பு, காதல், சுயநலம், துரோகம் போன்ற உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். தமிழ் சினிமா என்ற பேச்சை உலகில் யார் தொடங்கினாலும் தவறாமல் பேசப்படும் படமாக, சொல்லப்போனால் தமிழ் சினிமாவுக்கு புதியதொரு மேக்கிங் ட்ரெண்டை உருவாக்கிய படமாக இது மாறியுள்ளது.
பாலிவுட் டாப் இயக்குநரான அனுராக் காஷ்யப்புக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய படமாக இருக்கும் சுப்ரமணியபுரம், "இந்த படத்தை பார்த்த அதிலிருந்து பெற்ற உந்துதலால் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்" என்ற படத்தை உருவாக்கியதாக பல பேட்டிகளில் கிரெடிட்டும் கொடுத்துள்ளார்.
மேலே கூறப்பட்டது போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து நண்பர்களில் ஒருவருக்கு காதல் மலர, பின் சுயநலத்தாலும், துரோக்கத்தாலும் வீழ்த்தப்படுவதுமே சுப்ரமணியபுரம் படத்தின் ஒன்லைன். மிகவும் சிம்பிளான கதையாக இருந்தாலும் 1980 காலகட்டத்தில் நடப்பது போல் காட்டியது, அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தியதும் தான் இந்த படம் மொழிகளையும் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படமாக உள்ளது.
சசிக்குமார் இந்த படம் மூலம் இயக்குநர், தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சென்னை 600028 படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஜெய்க்கு பிரேக் கொடுத்த படமாகவும், மிக முக்கியமான காமெடியனாக தோன்றிய கஞ்சா கருப்பு இந்த படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் தோன்றி சர்ப்ரைஸ் தரும் விதமாகவும் உருவாக்கியிருப்பார்கள்.
உள்ளூர் அரசியலுக்கு பழிகடாவாகும் இளைஞர்கள்
பொதுவாக நகரத்தை சேர்ந்த ரவுடி, வன்முறை கதைகளம் என்றால் வட சென்னையும், நகரம் இல்லாத இடமாக காட்டப்பட்டால் அது மதுரையை பின்னணியாக வைத்து உருவாக்கப்படுவது தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட்டாகவே இருந்து வருகிறது. சுப்ரமணியபுரம் படமும் அதிலிருந்து விதிவிலக்கு பெறாத படமாக இருந்தாலும், இதில் பெரிதாக குறிக்கோள் எதுவும் இல்லாமல் நட்பை கொண்டாடும் விதமாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் வன்முறையை எப்படி கையில் பிடித்தார்கள் என்பதை சுவாரஸ்யமாகவும், இறுதியில் திடுக் திருப்புமுனையோடு சொல்லியிருப்பார்கள்.
மதுரை சுப்ரமணியபுரத்தை மையமாக கொண்ட படத்தின் கதையில், 1980இல் அந்த பகுதி வாழ்வியலை ஒளிப்பதிவு, கலை இயக்கம், காஸ்ட்யூம் என அனைத்திலும் கொண்டு வந்திருப்பார்கள். திரைக்கதையில் உள்ளூர் அரசியலுக்கு இளைஞர்கள் எப்படி பழிகடவாக்கப்படுகிறார்கள் என்பதையும் எதார்த்தமாகவும், விறுவிறுப்பான திருப்பங்களுடனும் காட்டியிருப்பார்கள்.
இயக்குநராக இருந்து வந்த சமுத்திரக்கனி, இந்த படத்தில் நல்லவன் போல் வில்லனாக நடிப்பில் தனியொரு ஆவர்த்தனை செய்திருப்பார். படத்தில் அதிகமான கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும் காமெடி, நய்யாண்டி, காதல், வில்லத்தனம் என ஒவ்வொரு காட்சிகளுக்கு கதையோடு பயணிக்கும் விதமாகவே இருக்கும்.
பீரியட் படத்துக்கான ட்ரெண்ட்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது பீரியட் படங்கள் வெளிவந்தாலும், பீரியட் கதைகளுக்கான ட்ரெண்டையும், கதையின் காலகட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு காரணமாக சுப்ரமணியபுரம் அமைந்து இருந்தது. இந்த படத்தின் கதை நடக்கும் காலத்தின் நிகழ்ந்த் பல்வேறு விஷயங்களை அப்படியே காட்சிப்படுத்தி நினைவலைகளில் அசைபோட வைத்திருப்பார்கள்.
முரட்டுக்காளை ஓபனிங் ஷோ, பட புரொமோஷனுக்காக மேள தாளத்துடன் நோட்டீஸ் கொடுப்பது, அந்த கால பேருந்து, வீடுகள் மற்றும் தெருக்கள் என சொல்லிக்கொண்டே போகும் விதமாக டீடெய்லிங்கில் பட்டையை கிளப்பியிருப்பார்கள்.
ஜேம்ஸ் வசந்தன் இசை
கொடைக்கானலில் படித்தபோது அந்த பள்ளியின் மியூசிக் டீச்சராக இருந்த பிரபல தொகுப்பாளரான ஜேம்ஸ் வசந்தனை, இந்த படம் மூலம் இசையமைப்பாளராக சசிக்குமார் அறிமுகமாக்கினார். படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படத்தில் இடம்பிடித்த கண்கள் இரண்டால் பாடல் இளைஞர்களின் லவ் ஆந்தமாக மாறியது. இந்த பாடலை காட்சிப்படுத்திய விதமும் கண்களில் ஒட்டிக்கொள்ளும் விதமாக அமைந்தன. சுப்ரமணியபுரம் என்ற தீம் பாடல் ரசிக்கும் விதமாக இருந்தன. அதேபோல் பின்னணி இசையும், குறிப்பாக க்ளைமாக்ஸில் வரும் இசையும் படத்தின் கதைக்கு ஏற்ப மிரட்டலாக இருந்தன.
பாக்ஸ் ஆபிஸில் வசூல்வேட்டை
கமல்ஹாசனின் தசாவதாரம் வெளியான சில வாரங்களில் இந்த படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி குறைவான ரிலீசானது. ஆனால் ரசிகர்களின் பேச்சால் வரவேற்பை பெற்று கூட்டம் கூட திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் வசூல்வேட்டையும் நிகழ்த்தியது. 85 நாள்களில் படமாக்கப்பட்ட சுப்ரமணியபுரம் அந்த ஆண்டில் 100 நாள்களுக்கு மேல் ஓடிய படங்களில் லிஸ்டில் இணைந்தது. இந்த படம் பற்றி பேச்சு இல்லாமல் தமிழ் சினிமா பற்றி பேச முடியாது என்கிற அளவில் தனியொரு அந்தஸ்தை பெற்ற படமாக மாறியிருக்கும் சுப்ரமணியபுரம் படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்