HBD Singer Chitra: சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி..! ரசிகர்கள் மனதில் ரீங்காரமாய் ஒலிக்கும் பாடகி சித்ரா
Jul 27, 2024, 11:26 PM IST
சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகியாக இருப்பவர் பி.எஸ். சித்ரா. நான்கு தசாப்தங்களாக ரசிகர்கள் மனதில் ரீங்காரமா்ய ஒலிக்கும் குரலாக இருக்கிறார்.
சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் சிறந்த பின்னணி பாடகிக்கான குரலுக்கு சொந்தக்காரராக இருப்பவர் பாடகி சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்றே அன்போடு அழைக்கப்பட்ட இவர், பலரது மனதில் ரீங்காரமாய் ஒலிக்கும் குரலாகவே இருந்து வருகிறார்.
பாடகி சித்ராவின் பின்னணி
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பாடகி சித்ராவின் தந்தை வானொலியில் புகழ் பெற்ற பாடகரான கிருஷ்ணன் நாயர். இவரது தாய் வீணை வித்தகர் சாந்தகுமாரி. இசைக்குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவே இவருக்கு இசை ஆர்வமானது இயல்பாகவே ஒட்டிக்கொண்டது.
சித்ராவின் தாயார் சிறு வயது முதலே அவரை பூஜை அறையில் நின்று பக்தி பாடல்களை பாட ஊக்கப்படுத்தினார். கர்நாடக சங்கீதத்தை முறையாக பயின்ற பாடகி சித்ரா, பிரபல பாடகர் டாக்டர் ஓமணக்குட்டி என்பவரிடம் முறைப்படி இசையும் பயின்றார்.
பள்ளி நாள்களிலேயே சிக்கலான தோடி ராகத்தில் ஸ்வரங்களை பூர்த்தி செய்து மத்திய அரசின் திறமை வாய்ந்தவர்களுக்கான 7 வருட உதவித் தொகையை பெற்று இசை உலகில் தன் முதல் சாதனையை பதிவு செய்தார்.
கேரள பல்கலையில் இசைத்துறையில் பிஏ இளங்கலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி, பின்னர் எம்ஏ முதுகலை பட்டமும் பெற்றார்.
சினிமா அறிமுகம்
ஓமண்ணக்குட்டியின் சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் சித்ராவுக்கு திரைத்துறையில் அறிமுகம் ஏற்படுத்தி தந்தார். புதிய குரலுக்கான தேடலில் சித்ராவின் கானக்குயில் குரலால் ஈர்க்கப்பட்டு அவருக்கு பாடும் வாய்ப்பை பெற்று கொடுத்தார். சினிமாவில் பாடல் பாடுவதற்கு முன்னரே பாடகி சித்ரா, பிரபல பாடகர் ஜேசுதாஸ் உடன் இணைந்து ஏராளமான கச்சேரிகளிலும் பங்கேற்று பாடியுள்ளார்.
தமிழில் அறிமுகம்
ஆரம்பத்தில் மலையாள சினிமாக்களில் பாடி வந்த பாடகி சித்ராவை, தமிழில் இசைஞானி இளையராஜா இசையில் நீ தானா அந்த குயில் படத்தில் பூஜைக்கேற்ற பூவிது பாடலில் அறிமுகம் செய்தார். அன்று தனது அற்புத குரலால் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த சித்ரா, இன்று வரையில் நீங்காமல் நிலைத்து நின்று வருகிறார்.
துள்ளியெழுந்தது பாட்டு, ஒரு ஜீவன் பாடுது, பாடறியேன் படிப்பறியேன், நானொரு சிந்து காவடி சிந்து, அந்த நிலாவதான்,கண்ணாளனே என ஏராளமான பாடல்கள் இவரது ஹிட் லிஸ்டில் உள்ளது. பாடறியேன் படிப்பறியேன் பாடலுக்கான சிறந்த தேசிய விருதை தட்டிச் சென்றார். ஏ.ஆர்.ரகுமான், மரகத மணி, வித்யாசாகர் , சிற்பி, தேவா, பரத்வாஜ், சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், ஆதித்யன் போன்ற பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான மனதை மயக்கும் பாடல்களை பாடி உள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி அசாம், வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடியுள்ளார்.
சித்ரா வென்ற விருதுகள்
1979 ஆம் ஆண்டு முதல், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக 25,000 திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் பாடகி சித்ரா. திரைப்படப் பாடல்கள் தவிர, 7,000 பாடல்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். அதே போல் 6 முறை சிறந்த பாடகி என்ற தேசிய விருதையும், ஆறு மாநிலங்களில் 36 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு, இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான 'பத்ம பூஷன்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி, சங்கீத சரஸ்வதி என பல பெயர்களால் அழைக்கப்படும் பாடகி சித்ராவின் பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்