Pechi Movie Review: ‘அரண்மனை 4 மிரட்டலை மிஞ்சியதா அரண்மனை காடு?’ பேச்சி திரை விமர்சனம்!
Aug 02, 2024, 10:47 AM IST
Pechi Movie Review: முதல் பாதி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி பறக்கிறது. அதிலும் பேச்சியின் ஆட்டம் ஆரம்பித்ததும், காடு பற்றி எரிகிறது. இரவு இல்லாமல் பேய் படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்ததற்கே அவர்களுக்கு சல்யூட் அடிக்கலாம். பகலில் பார்வையாளர்களை மிரட்டுவது அவ்வளவு எளிதல்ல.
Pechi Movie Review: ஹாரர் திரைப்படங்கள், எப்போதும் சீசன் திரைப்படங்களாக தான் திரைக்கு வரும். ஒரு அருந்ததி வெற்றி பெறும் போது, பல அருந்ததிகள் வருவார்கள். ஒரு முனி வெற்றி பெறும் போது, பல முனியாண்டிகள் வருவார்கள். இது அரண்மனை காலம். சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ மெகா வெற்றி பெற்று, மீண்டும் ஹாரர் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் பேச்சி!
காடும் கதையும் செய்யும் பயணம்
அரண்மனைக் காடு என்கிற மலை கிராமத்தில் சுற்றுலாவுக்கு வரும் நண்பர்கள் குழு. அவர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்ல, உள்ளூர் வன ஊழியர் ‘சைடு பிசினஸாக’ பணியை ஏற்கிறார். ஊரில் உள்ள கட்டுப்பாடு, அதன் பின்னணியில் இருக்கும் அமானுஸ்ய சம்பவங்களை நன்கு அறிந்த அந்த வன ஊழியர், சுற்றிப் பார்க்க வந்திருக்கும் அந்த குழுவினரிடம் பல முறை எச்சரிக்கிறார்.
அவர் எச்சரிக்கையை மீறி, நண்பர்கள் செய்யும் வேண்டாத வேலை, காட்டில் காத்திருக்கும் பேச்சிக்கு அவர்கள் விருந்தாக வழி செய்கிறது. யார் அந்த பேச்சி? எதற்காக காத்திருக்கிறாள்? அவளிடம் சிக்கினால் என்ன ஆகும்? என்பது தான் கதை. வன ஊழியராக பால சரவணன். இதுவரை காமெடியில் மட்டுமே பார்த்து வந்த பால சரவணன், இந்த முறை படு சீரியஸாக நடித்திருக்கிறார்.
பேச வைக்கும் பேச்சிப் பேய்
பேச்சுக்கு பேச்சு, பேச்சி என்று அவர் அலர்ட் செய்யும் இடங்களிலும், தன் பேச்சை மீறி அந்த இளைஞர்கள் செய்யும் ரகளையில் டென்ஷன் ஆவதிலும், விசயம் தெரிந்த உள்ளூர்வாசியாக வாழ்ந்திருக்கிறார் பால சரவணன். நண்பர்கள் கூட்டத்தில் நன்கு முகம் அறிந்தவராக காயத்ரி. படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை பளிச்சென இருக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் தரும் ட்விஸ்ட் தான், பேயை விட பயங்கரமாக இருக்கிறது.
ஹீரோ தேவ் ராம்நாத், கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்திருக்கிறார். உடன் நண்பர்களாக வரும் ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, மகேஷ் ஆகியோரும் தங்கள் இருப்பை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். பேச்சியாக வரும் பாட்டி, நமக்கு நன்கு அறிமுகமானவர். இவர் பேயா என்று யோசிப்பதற்குள், படுபயங்கர பெர்ஃபாமன்ஸ் செய்து மிரட்டிவிடுகிறார்.
பகலில் வரும் பேய்.. புதுசா இருக்கே!
முதல் பாதி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி பறக்கிறது. அதிலும் பேச்சியின் ஆட்டம் ஆரம்பித்ததும், காடு பற்றி எரிகிறது. இரவு இல்லாமல் பேய் படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்ததற்கே அவர்களுக்கு சல்யூட் அடிக்கலாம். பகலில் பார்வையாளர்களை மிரட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதை முடிந்தவரை கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன்.
பேச்சியின் ப்ளாஷ்பேக், அதன் பின் நடந்த திட்டமிடல் என நிறைய ட்விஸ்ட் இருந்தாலும், அதை இன்னும் கொஞ்சம் முன்பே நகர்த்தியிருக்கலாம். நகைச்சுவைக்கான நிறைய ஸ்கோப் இருந்தும், இயக்குனர் அதை சுத்தமாக நிராகரித்ததும், வந்திருப்பவர்கள் காதலர்களா? நண்பர்களா? மாணவர்களா? என்கிற குழப்பத்தை தீர்ப்பதற்கான காட்சிகளை விரிவுபடுத்தாததும் குறையே!
மிரட்டும் ஒலியும், ஒளியும்!
பேய் படத்தில் லாஜிக் தேவையில்லை, மேஜிக் போதும் என்பது தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஃபார்மட். ஆனால், அதிலும் சில லாஜிக் வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பார்த்திபன், அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தியிருக்கிறார். வானகத்தை வளமாகவும், மிரட்டலாகவும் காட்டியிருக்கிறார். அதே போல இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், ப்ரேமம் படத்தின் இசையமைப்பாளர் பேய்க்கு இப்படி கூட பின்னணி தருவாரா என்று புருவம் உயர்த்த வைக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளர் கோகுல் மற்றும் வெயிலான் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், ஹாரர் ப்ரியர்களுக்கு கட்டாயம் புதுவித அனுபவம் தரும். ஐந்தாறு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, காட்டில் ஒரு காட்டு காட்டியிருக்கும் படக்குழுவினரின் புதிய முயற்சிக்காக குடும்பத்தோடு, குழந்தைகளோடு ஒரு முறை தியேட்டரில் படத்தை பார்க்கலாம்.
டாபிக்ஸ்