Vishal: அன்று திருட்டு விசிடி; இன்று ஹிந்தி ரிலீஸுக்கு கொடுத்த லஞ்சம் பற்றிய வீடியோ: ரியல் புரட்சித்தளபதியான விஷால்
Sep 28, 2023, 07:51 PM IST
மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்சனுக்கு, லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை உண்டு செய்துள்ளது.
நடிகர்கள் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், மார்க் ஆண்டனி. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது, படத்தில் இருக்கும் காமெடியால் படம் பிக்கப் ஆகி ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக, டைம் டிராவல் கான்செப்டில் சில்க் ஸ்மிதாவிடம் பேசுவதுபோல் உருவாக்கப்பட்ட காட்சிகளுக்குத் தியேட்டரில் விசில் பறக்கிறது.
படம் வெளியாகி ஐந்து நாட்களில் ரூ.62.11 கோடி வசூலை எட்டியது. அதனைத் தொடர்ந்து, 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது, மார்க் ஆண்டனி. மேலும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதால், படத்தை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிறைய நாட்களுக்குப் பிறகு, விஷாலின் ஒரு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்தின் முதல் நாள் வசூல் 7.5 கோடியாக இருந்திருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட், ரூ.28 கோடியாக இருந்த நிலையில், மார்க் ஆண்டனி படமானது தயாரிப்பாளருக்கு மூன்று மடங்கு லாபத்தைத் தந்துள்ளது. தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் இன்று டப் செய்யப்பட்டு ஹிந்தியில் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி வெர்ஷனின் தணிக்கைக்காக ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக நடிகர் விஷால் பரபரப்பு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது கேரியரில் இந்தச் சூழலை எதிர்கொண்டதில்லை. மார்க் ஆண்டனி திரைப்படம் இந்தியில் இன்று வெளியாவதற்காக மட்டும், சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் மேனகாவுக்கு அதிகப் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’’எனக் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் விஷால், மத்திய தணிக்கை அதிகாரிகளின் மும்பை அலுவலகத்தில் மட்டும், மார்க் ஆண்டனியின் ஹிந்தி தணிக்கைக்காக மட்டும் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மொத்தமாக 2 பரிவர்த்தனைகளை செய்ததாகவும்; ஸ்கிரீனிங்கிற்கு ரூ.3 லட்சம்; சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என இரண்டு கட்டமாக பரிவர்த்தனைகள் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த லஞ்சப்புகார் தொடர்பாக, மகாராஷ்டிர முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் விஷால் ரூ.4, 5 கோடிகளைக் கொண்டு சிறுபட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டாம் எனவும்; அதனை வங்கிக் கணக்கில் போட்டு சேமிக்கலாம் எனவும் கூறியது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்