‘அத பத்தி என்கிட்ட கேட்ககூடாது.. தேசிய விருதுக்கு தகுதியானதுதான்” - ஜானி மாஸ்டர் கேள்விக்கு நழுவிய நித்யா மேனன்
Oct 08, 2024, 12:14 AM IST
திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதே’ பாடலுக்கு நடன வடிவமைத்தவரும், தற்போது பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருமான ஜானி குறித்து நித்யா மேனன் பேசி இருக்கிறார்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து நித்யாமேனன் பேசி இருக்கிறார்
இது குறித்து அவர் பேசும் போது, “ ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதை நான் ஒரு நல்ல ட்ரெண்டாக பார்க்கிறேன். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய தயாரிப்பு செலவு இல்லை, பெரிய செட்கள் அமைக்கப்படுவதில்லை, விதவிதமான காஸ்ட்யூம்கள் இல்லை. இது முழுக்க முழுக்க நடிப்புக்காக கொடுக்கப்பட்ட விருது. ‘திருச்சிற்றம்பலம்’ அந்த மாதிரியான ஒரு படம் தான். உண்மையில் நடிப்புதான் அந்த படத்தினுடைய ஹைலைட்டான விஷயம்.
மிகவும் நல்ல விஷயம்
அந்தப் படத்தை அடையாளப்படுத்தி விருது கொடுத்திருப்பது என்பது மிகவும் நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் யோசித்தது போலவே, அனைவரும் இணைந்து ஒன்றாக வேலை செய்தோம். எல்லாருடைய கருத்துக்களும் அதில் இருந்தன. உண்மையில் நாங்கள் நான்கு பேரும் படத்தில் ஒரு குடும்பம் போல இருந்தோம்.
பெண்களை மையப்படுத்திய கதை கொண்ட படங்கள் என்று அது போன்ற படங்களை தனிமைப்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை. இப்படி செய்தால் நமக்கு அங்கீகாரம் கிடைக்குமா? இல்லை, அப்படி செய்தால் நமக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்று என்னிடம் கேட்பது மிகவும் தவறான விஷயம். ஏனென்றால் நான் அது போல யோசிப்பது கிடையாது.
நல்ல படம் செய்ய வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நல்ல படம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும். நாம் செய்கிற படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் நடன வடிவமைப்பு செய்த ‘பறக்க பறக்க பிடிக்குதே’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து கேட்ட போது, “அதைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கத் தேவையில்லை. அந்த பாடல் மிகவும் அருமையாக நடனம் அமைக்கப்பட்டது. அது தேசிய விருதுக்கு தகுதியானது” என்று பேசினார்.
முன்னதாக இந்தப்படம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ “இன்றோடு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த நேரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லைதான். ஆனாலும் நாம் கொண்டாடலாம். இதுதான் இந்தப்படத்தின் மூலமாக எனக்கு கிடைத்திருக்கும் முதல் தேசிய விருதிற்கு கொடுக்கப்படும் நீதி என்று நினைக்கிறேன்.
என்ன ஒரு அனுபவம்..
எனக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவர்கள். ஆனந்ததில் பேச முடியாமல் திணறியவர்கள், என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதுவரை நான் சந்திக்காத பலர் என்னை தூரத்தில் இருந்து தங்களுடைய அன்புள்ளம் கொண்ட இதயத்தால் ஆசீர்வதித்தனர்; வாழ்த்தினர். அவர்கள் அனைவரும், தாங்கள் தேசிய விருது பெற்றது போல என்னை உணரவைத்தனர். என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து கொடுத்த உங்களது ஆசீர்வாதம் எப்படியானது தெரியுமா?
ஒரு சிறந்த நடிப்பு என்பது எடை இழப்பு, எடை அதிகரிப்பு, பிராஸ்தடிக் மேக்கப் அல்லது பெரிய உடல் ரீதியான மாற்றங்களோடு தொடர்புடையது கிடையாது. ஒரு சிறந்த நடிப்பின் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே முழு நடிப்பு அல்ல. அதை நான் எப்போதுமே செய்ய முயற்சித்து இருக்கிறேன். அது எனக்கு பெரிதளவு உதவியும் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும்.
காரணம், நான் நடிப்பில் முன்னணி நடிகர்கள் இவ்வளவு சமமாக பங்களித்த ஒரு படத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. ஆகையால் நாம் நால்வரும் இதனை பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பலம் பற்றி வலிமையாக குரல் கொடுத்ததற்கு நன்றி. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் மேலே வருவது கடினம். நாங்கள் இன்னும் பல படங்களில் இணைந்து நடிக்க வேண்டியது இருக்கிறது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
டாபிக்ஸ்