ரொம்ப கஷ்டமா இருக்கு.. கெளதம் மேனன தாக்கி பேசணும்னு வைக்கல" - உண்மையை உடைத்த கார்த்திக் நரேன்
Nov 23, 2024, 02:13 PM IST
ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கக் கூடிய வசனங்கள், கௌதம் வாசுதேவ் மேனனை தாக்கி இருப்பது போல இருப்பதாக கேள்வி கேட்கிறீர்கள்? அதற்கு என்னுடைய பதில்," - கார்த்திக் நரேன்
துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது அடுத்தப்படமாக உருவானதுதான் நரகாசுரன். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இருக்கிறார்.
கார்த்திக் நரேன் உடன் ஏற்பட்ட பிரச்சினை, நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக அந்தப்படம் முடங்கியே கிடக்கிறது. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய படங்களும் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது நிறங்கள் மூன்று திரைப்படம் மூலம் மீண்டும்
திரைக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாக பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய இரண்டாவது படம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் பேசி இருக்கிறார்.
இரண்டாவது வாய்ப்பு
இது குறித்து அவர் பேசும் போது, "நமக்கு ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்றால் ஒன்று அந்த விஷயத்தில் நாம் மூழ்கி முன்னோக்கி செல்லாமல் இருக்கலாம். இல்லையென்றால், அந்த நிகழ்வில் இருந்து நம்மால் என்ன கற்றுக் கொள்ள முடியுமோ? அதை கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம். இரண்டுமே நம் கைகளில் தான் இருக்கிறது. நான் தற்போது இரண்டாவது வாய்ப்பை கையில் எடுத்திருக்கிறேன்.
ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கக் கூடிய வசனங்கள், கௌதம் வாசுதேவ் மேனனை தாக்கி இருப்பது போல இருப்பதாக கேள்வி கேட்கிறீர்கள்? அதற்கு என்னுடைய பதில், படத்தை படமாக பார்க்க வேண்டும்; அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அந்தப்படத்தின் கதாபாத்திரங்களாக பார்க்க வேண்டும் என்பதுதான், இந்த இடத்தில் நான் வைக்கக்கூடிய கோரிக்கை அது ஒன்றுதான்;
பலமும் பலவீனமும்
என்னுடைய பலமும் பலவீனமும் இந்த சினிமா தான். கடந்த சில வருடங்களாக நடந்த கசப்பான சம்பவங்கள் என்னை பாதித்தது உண்மைதான். அந்த நிகழ்வுகளில் நான் அதிகமாக பாதிக்கப்பட்டு அது குறித்து நான் யோசித்துக்கொண்டே இருந்தேன்.
ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், கிட்டத்தட்ட அதையே முழு நேர தொழிலாக கூட செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இவை நமக்கு எதற்காக நடந்தது என்பது குறித்தான புரிதல் வந்தது. அந்த புரிதல் எனக்கு வந்தவுடன் நான் கொஞ்சம் முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்பு அமைந்தது.
என்னுடைய இரண்டாவது படத்தில் நடந்த பிரச்சினைகள் இப்போதும் என்னை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நான் எத்தனை படங்கள் எடுத்தாலும், அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வியாக இருக்கும்' என்று பேசினார்.
டாபிக்ஸ்