Nagendran's Honeymoons Review: 6 திருமணம்.. 5 தேனிலவு.. அடேங்கப்பா பேர்வழியா நாகேந்திரன்? கலகலப்பான கல்யாண கலாட்டா!
Jul 26, 2024, 06:07 PM IST
Nagendran's Honeymoons Review: முழுநீள நகைச்சுவை வெப்சீரிஸ் பார்க்க விரும்புவோருக்கு இது நல்ல தீனி. ஒவ்வொரு திருமணமும் ஒரு எபிசோட் போல கலகலப்பாக இருக்க, காட்சிகளும், கதாபாத்திரங்களும், இசையும் பொருத்தமாக உள்ளன.
Nagendran's Honeymoons Review: நிதின் ரெஞ்சி பனிக்கர் இயக்கத்தில், சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் டிஸ்னிப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ், நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ். ஒருவருக்கு தேன் நிலவு தானே நடக்கும், அது என்ன.. தேன்நிலவுகள்? என்று தோன்றுகிறதல்லவா? அது தான் கதை!
70களில் நடக்கும் கதைக்களம்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் சட்டையில் அழுக்குபடாமல், முழுநேர சோம்பேறியாக இருப்பவர் நாகேந்திரன். வயதான தாய் வேலைக்குச் சென்று அவரின் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார் நாகேந்திரன். 40 வயதிலும், குவைத் போய் தான் சம்பாதிப்பேன் என்று அடம்பிடிக்கும் நாகேந்திரனுக்கு, சோறு, தூக்கம் தான் உலகம்.
இப்படிப்பட்ட நாகேந்திரனுக்கு தன்னுடைய அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் தாய். நாகேந்திரனுக்கு பெண் விசயத்தில் பெரிய ஆசைகள் கிடையாது. அதிலும் திருமணம் செய்தால், அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதால், திருமணம் என்கிற வார்த்தையே அவனுக்குப் பிடிக்கவில்லை. இதற்கிடையில் புரோக்கரான அவனது நண்பன், ‘மாமன் மகளை திருமணம் செய்தால், வரதட்சணை கிடைக்கும், அந்த பணத்தில் குவைத் போகலாம்’ என்று நாகேந்திரவை கட்டாயப்படுத்துகிறான்.
ஏமாற்றம் தந்த நாகேந்திரனின் திருமணம்
அதை நம்பி திருமணம் செய்யும் நாகேந்திரனுக்கு, முதல் நாளே, மாமன் ஒரு பரம ஏழை என்பதும், ஒரு ரூபாய் கூட இல்லாதவர் என்பது தெரிகிறது. புரோக்கர் நண்பரின் உதவியோடு, இரவோடு இரவாக ஊரில் இருந்து தப்பிக்கிறான் நாகேந்திரன். அதன் பின், பந்தினம்திட்டாவில் லில்லிக்குட்டி, காசர்கோட்டில் லைலா, அதன் பின் பாலக்காட்டில் நம்பூதிரி மகள், பின்னர் குட்டநாட்டில் தங்கம் என அடுத்தடுத்து 5 பெண்களை திருமணம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வரதட்சணையில் குவைத் செல்ல புரோக்கர் நண்பனின் ஐடியாவில், திருமணங்களாக செய்கிறான் நாகேந்திரன்.
ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியிலும், சம்மந்தப்பட்ட மணமகள்களுக்கு ஒருவித குறைபாடு இருக்கிறது. அதற்கான அவசர மாப்பிள்ளையாக நாகேந்திரனுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கிறது. 5 திருமணத்தை செய்தும் போதிய பணம் கிடைக்காமல், ஆறாவதாக தமிழ்நாட்டின் பழனிக்கு வந்து அம்மு அபிராமியை திருமணம் செய்கிறார்.
ஆனால், அந்த திருமணம் தான், அவருக்கு பெரிய டிவிஸ்ட் ஆகிறது. அது தான், சீரியலின் சஸ்பென்ஸ் என்பதால், அதை உடைக்கவிரும்பவில்லை. இப்போது மேக்கிங்கிற்கு வருவோம். கேரள திரைப்படங்கள் என்றாலே அதன் காட்சி தளங்கள் தான், அந்த வகையில் வெப்சீரிஸ் என்றாலும், அழகான காட்சிகளுடன் சீரிஸ் நகர்வது, காட்சிக்கு இனிமையாக உள்ளது.
நாகேந்திரனாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு, அந்த கதாபாத்திரமாகவே தெரிகிறார். சோத்து மூட்டையாகவும், சோம்பேறி குடோனாகவும், திருமணம் செய்தாலும் கண்ணியமாக நகரும் கணவனாகவும் எல்லா வகையிலும் சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு திருமண சம்பவமும் கலாட்டா கல்யாணமாக சிரிக்க வைக்கிறது.
விலைமாதுவை கூட விட்டு வைக்காத நாகேந்திரன்
அதிலும், ஒரு ஊரே சேர்ந்து விலைமாது தங்கத்திற்கு திருமணம் செய்து வைப்பதும். அந்த பணத்திற்காக அவளை திருமணம் செய்து, வீட்டிற்கு வரும் கஸ்டமர்களுக்கு சோடா வாங்கித் தருவதும், முதல் இரவில் கூட கஸ்டமர் வந்து நிற்பதும் என மலையாள சினிமாவில் மட்டுமே சாத்தியமான கலகலப்பு காட்சிகள் ஏராளம்.
ஒரு அப்பாவி, அதிகப்படியான க்ரைம் செய்கிறான். ஆனால், அவன் செய்வது குற்றம் என்பது கூட தெரியாமல் அவன் இயக்கப்படுவதும் கூட காமெடியாக இருப்பது, ரசிக்கும்படியாக உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ 5 திருமணத்தை செய்துவிட்டு, குவைத் செய்வதும் தடைபட்டு, இறுதியில் 5 பெண்களும் தன்னுடைய வீட்டுக்கு வர, அடுத்து என்ன செய்யப் போகிறார் நாகேந்திரன் என முடிகிறது முதல் பாகம். எப்போது இரண்டாம் பாகம் வரும் என்கிற எதிர்பார்ப்போடு முடிகிறது சீரிஸ்.
முழுநீள நகைச்சுவை வெப்சீரிஸ் பார்க்க விரும்புவோருக்கு இது நல்ல தீனி. ஒவ்வொரு திருமணமும் ஒரு எபிசோட் போல கலகலப்பாக இருக்க, காட்சிகளும், கதாபாத்திரங்களும், இசையும் பொருத்தமாக உள்ளன. 70களில் நடப்பதைப் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், அதற்கான டீட்டயலும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. மலையாள மகுடத்தில் இன்னொரு வைரமாக இந்த சீரிஸ் இருக்கும்.
டாபிக்ஸ்