Tamil Movies: எம்ஜிஆர் வாழ்க்கையில் திருப்புமுனை..தமிழில் சிறந்த திகில் படம்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ
Sep 20, 2024, 06:59 AM IST
Tamil Movies Released on Sep 20: எம்ஜிஆர் வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம், தமிழில் சிறந்த திகில் படம் என இன்றைய நாளில் வெளியான முக்கிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் செப்டம்பர் 20ஆம் தேதியான இன்று எம்ஜிஆர், சிவாஜி கணேசன், அர்ஜுன் ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இன்றைய நாளில் வெளியாகியிருக்கும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
நீலமலை திருடன்
எம்ஜிஆருக்காக எழுதப்பட்ட கதையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போக, ரஞ்சன் கதையின் நாயகனாக நடித்த வாள்சண்டை சாகச பாணியில் உருவான படம் நீலமலை திருடன். 1957இல் வெளியான இந்த படத்தை எம்.ஏ. திருமுருகன் இயக்கியுள்ளார். அஞ்சலி தேவி, பி.எஸ். வீரப்பா, கண்ணாம்பா, ஈ.வி. சரோஜா, கே.ஏ. தங்கவேலு உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
பக்கா கமர்ஷியல் படமாக வெளிவந்த நீலமலை திருடன் சூப்பர் ஹிட் ஆனதுடன் வசூலையும் குவித்தது. சிறந்த பிளாக் அண்ட் ஓயிட் பொழுதுபோக்கு படமாக திகழும் நீலமலை திருடன் வெளியாகி 67 ஆண்டுகள் ஆகிறது
கல்யாணியின் கணவன்
சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர். ராதா, எஸ்.வி. ரங்கா ராவ் உள்பட பலர் நடித்து காதல் கலந்த பேமிலி ட்ராமா பாணியில் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளியான படம் கல்யாணியின் கணவன். சிவாஜி கணேசன் பீல் குட் படங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் ரிலீஸ் ஆன 1963 காலகட்டத்தில் பெரிய வெற்றியை இந்த படம் பெறவில்லை.
ஒளி விளக்கு
எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பக்கா ஆக்சன் திரைப்படம் ஒளி விளக்கு. இந்தியில் ஹிட்டடித்த பூல் அவுர் பத்தர் என்ற படத்தின் ரீமேக்காக 1968இல் வெளியான ஒளி விளக்கு படத்தை தபி சாணக்யா இயக்கியுள்ளார்.
ஜெயலலிதா, செளகார் ஜானகி, எஸ்.ஏ. அசோகன், மனோகர், சோ உள்பட பலரும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் திரைவாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம் ரிலீசான ஆண்டின் சூப்பர் ஹிட் படமாகவும் மாறியது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது
யார்?
அர்ஜுன், நளினி, ஜெயசங்கர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் யார். 1985இல் வெளியான திகில் படமாக இதை சக்தி-கண்ணன் ஆகியோர் இயக்கியிருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களை அலரவைத்தை பேய் படமாக இருக்கும் யார், அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய காரணமாக இருந்த படமாக உள்ளது. தமிழில் வெளியான சிறந்த திகில் படமாக இருக்கும் யார் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகிறது.
ராஜ ரிஷி
யார் திரைப்படம் வெளியான அதே நாளில் போட்டியாக, அந்த படத்தின் கதைக்கு அப்படியே நேர்மாறாக இந்து சரித்திர கதையாக உருவான படம் ராஜ ரிஷி. கே. சங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, நளினி, எம்.என். நம்பியார் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
ஏ.எஸ். பிரகாசத்தின் விஸ்வமித்ரன் நாடகத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பு வெகுவாக பாராட்டுகளை பெற்றது.
கிழக்கு கரை
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்து க்ரமை திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் 1991இல் வெளியானது. பி. வாசு இயக்கத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருந்த இந்த படம் சராசரி ஹிட் பெற்றது.
6 கேண்டில்ஸ்
ஷாம் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் 2013இல் வெளியானது. குழந்தைகள், சிறுவர்கள் கடத்தலை மையமாக வைத்து வெளியான இந்த படம் கொரிய மொழி திரைப்படமான வாய்ஸ் ஆஃப் ஏ மர்டரர் என்ற படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.
பூனம் கெளர், அனில் முரளி, முணாறு ரமேஷ் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள். வி.இஸட். துரை இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஷாம் உடல் தோற்றத்தில் மாற்றம் கொண்டு வந்து நடிப்பில் மெனக்கட்டியிருப்பார். விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்ற இந்த படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.