சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்! ப்யூர் டைரக்டர் எஸ்.பி. முத்துராமன்
Apr 07, 2023, 06:20 AM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்ததில் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படங்கள் முக்கிய பங்கு வகித்தது. ரஜினியை மாஸ் ஹீரோவாக ஜனங்களின் மனதில் பதிய வைத்ததில் இவரது பங்கு அளப்பரியது.
தமிழ் சினிமாவில் 1970, 80 காலகட்டங்களில் சிறந்த கமர்ஷியல் இயக்குநராக ஜொலித்தவர் எஸ்.பி. முத்துராமன். கருப்பு வெள்ளை படமான கனிமுத்து பாபாவில் தொடங்கிய இவரது பயணம் 1995இல் வெளியான தொட்டில் குழந்தை படத்துடன் நிறைவுக்கு வந்தது.
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், பாடலாசரியர் கண்ணதாசனிடம் உதவியாளராக தனது கலை பயணத்தை தொடங்கி பின்னர் 1960 முதல் 70 வரை முன்னணி இயக்குநர்களாக இருந்த கிருஷ்ணன்-பஞ்சு, பீம்சிங், ஏசி திருலோகசந்தர் உள்பட பலரிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
இதைத்தொடர்ந்து ஏவிஎம் நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்த எஸ்.பி. முத்துராமன் பின்னர் அந்த நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநராகவே மாறினார். ஏவிஎம் தயாரிக்கும் படம் என்றாலே பெரும்பாலும் எஸ்.பி. முத்துராமன் தான் படத்தை இயக்குவார் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. எழுத்தாளர்கள் கோலோச்சிய அந்த காலகட்டத்தில் டைரக்ஷன் என்ற பணியை மட்டும் மேற்கொண்டு ப்யூர் டைரக்டராக வலம் வந்தார் எஸ்.பி. முத்துராமன்.
ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குநர் கே. பாலசந்தராக இருந்தாலும், அவரை ஒரு மாஸ் நடிகராக ஜனங்களின் மனதில் பதிய வைத்தது எஸ்.பி. முத்துராமன் தான். சிறந்த ஜனரஞ்சகமான கதைகள் ரஜினியை படத்துக்கு படம் மாறுபடுத்தி காட்டி ரசிகர்களுக்கு விருந்து அளித்திருப்பார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தின் ரஜினியின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி காட்டிய இவர், முரட்டுகாளை, ராஜா சின்ன ரோஜா, குரு சிஷ்யன் போன்ற படங்களில் மாஸ் ஹீரோவாக ஜொலிக்க வைத்திருப்பார்.
ஜனரஞ்சக படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஓவர் டோஸ் செய்யாமல் அனைத்து வயதினரும் பார்க்கும் விதமாக படங்களை உருவாக்குவதில் கில்லாடியாக திகழ்ந்த எஸ்.பி. முத்துராமன், தான் இயக்கும் படங்களுக்கு தயாரிப்பாளுக்கு மினிமம் கியாரண்டி என்று இல்லாமல் உறுதியான ஹிட்டையை பெரும்பாலும் கொடுத்து வந்துள்ளார்.
ரஜினிகாந்தை வைத்து 25க்கும் அதிகமாக படங்களை இயக்கியுள்ள இவர், ரஜினியை அதிக இயக்கிய இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக ரஜினிகாந்தின் பாண்டியன் படத்துடன் தனது திரைபயணத்தை முடித்துகொள்ள முடிவு செய்து அந்த படத்தை இயக்கினார். படமும் செம ஹிட்டானது. ஆனாலும் சில காரணங்களால் பாண்டியன் படத்துக்கு பிறகு தொட்டில் குழந்தை என்ற படத்தை இயக்கிய பின் படங்கள் இயக்குவதில் இருந்து ஓய்வு பெற்றார்.
கமலுக்கும் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது, தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநராக இருந்து வரும் எஸ்பி முத்துராமன் இன்று தனது 88வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்