HBD Kalaiyarasan: மெட்ராஸ் முதல் சேரன்ஸ் ஜர்னி வரை-இன்று பிறந்த நாள் கொண்டாடும் கலையரசனின் கலைப் பயணம்!
Feb 20, 2024, 06:00 AM IST
சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கினின் நந்தலாலா, முகமூடி ஆகிய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. குணச்சித்திர நடிகராக நடித்தார்.
நடிகர் கலையரசன் 38வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்தியின் தோழனாக அன்பு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் இந்தக் கலையரசன்.
தமிழ் சினிமா ரசிகர்கள் இவர் ஏற்று நடித்த எந்தவொரு கதாபாத்திரத்தை மறந்தாலும், அன்பு கேரக்டரை மட்டும் யாராலும் மறந்துவிட முடியாது.
பெயருக்கு ஏற்றாற்போல் தான் ஏற்கும் கதாபாத்திரங்களில் மின்னுவார் இந்த கலையரசன். மெட்ராஸில்தான் கலையரசன் 1986ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பிறந்தார்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் பட்டப்படிப்பு பயின்றவரான கலையரசனுக்கு நடிப்பின் மீது கொண்ட காதலால் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார். அவர் அர்ஜுனன் காதலி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அந்தப் படம் வெளியாகவே இல்லை.
பின்னர், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கினின் நந்தலாலா, முகமூடி ஆகிய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. குணச்சித்திர நடிகராக நடித்தார்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் சிறிய வேடத்தில் நடித்தார். மத யானை கூட்டம் படித்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பரவலாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார்.
2014-இல் இரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் இவர் செய்த அன்பு கதாபாத்திரம் தான் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
இவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமையையும் தமிழ் திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சிறந்த துணை நடிகருக்கான விஜய் அவார்டு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். பிலிம்பேர் விருதை அன்பு கதாபாத்திரத்திற்காக வென்றார். சைமா அவார்டுக்கு சிறந்த துணை நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். பின்னர், டார்லிங், உருமீன், டார்லிங் 2, ராஜா மந்திரி என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
பின்னர், பா.இரஞ்சித்தின் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது. அதில் தமிழ் குமரன் கதாபாத்திரத்தில் அசத்தினார்.
பின்னர், அதே கண்கள் படத்தில் லீடு கேரக்டரில் பார்வைத்திறன் அற்றவராக நடித்து மற்றொரு பிரமாணத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர், நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், நயன்தாராவுடன் ஐரா, தனுஷுடன் ஜகமே தந்திரம் என முன்னணி நடிகர், நடிகைகளுடன் நடித்தார்.
மீண்டும் பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். குதிரைவால் படத்தில் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்தார்.
கலகத்தலைவன், நட்சத்திரம் நகர்கிறது என தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் கலையரசன்.
இணையத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். சோனிலைவில் விக்டிம், ஆஹா தமிழில் பேட்டைக்காளி ஆகிய இணையத் தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.
சென்ற ஆண்டு இவரது நடிப்பில் தங்கம், பர்கா, 2018, கருங்காப்பியம், சார்லஸ் எண்டர்பிரைசஸ் ஆகிய படங்கள் வெளியாகின.
தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் கலையரசன்.
டாபிக்ஸ்