Kajol - Prabhu Deva: 27 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த கஜோல் - பிரபுதேவா: என்ன படம்; இந்த தடவை எந்த மாதிரி ரோல் தெரியுமா?
May 28, 2024, 03:25 PM IST
Kajol - Prabhu Deva: 27ஆண்டுகளுக்குப் பின் கஜோல் - பிரபுதேவா ஆகியோர் இணைந்து ’மஹாராணி குயின்ஸ் ஆஃப் குயின்’ என்னும் படத்தில் நடித்துள்ளனர்.
Kajol - Prabhu Deva: பல ஆண்டுகளுக்குப் பின் நடிகை கஜோலும் நடிகர் பிரபுதேவாவும் இந்தி படத்தில் நடித்துள்ளனர். இதன் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழில் 'மின்சார கனவு' படத்தில் நடித்ததற்குப் பிறகு, 27 ஆண்டுகளுக்குப் பின், நடிகை கஜோலும் நடிகர் பிரபுதேவாவும் திரில்லர் படமான ‘மஹாராணி - குயின் ஆஃப் குயின்ஸ்’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். தெலுங்கு திரைப்பட இயக்குநர் சரண் தேஜ் உப்பலாபதி, இந்தியில் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.
மஹாராணி படத்தில் நடிப்பவர்கள் விவரம்:
இப்படத்தில் நடிகர் பிரபு தேவாவும், நடிகை கஜோல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் நசிருதீன் ஷா, ’வாத்தி’ திரைப்படப் புகழ் சம்யுக்தா, ஜிஷு சென்குப்தா, ஆதித்யா சீல், பிரமோத் பதக் மற்றும் சாயா கதம் (கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாளர் ‘’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’’) ஆகியோரும் இந்த திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
"மஹாராணி" படத்தின் முதல் கட்ட தயாரிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை இன்று(மே 28ல்) வெளியிட்டனர்.
பவேஜா ஸ்டுடியோஸ் மற்றும் இ7 என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில், ஹர்மன் பவேஜா மற்றும் வெங்கடா அனிஷ் டோரிகில்லு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
"கஜோல், பிரபுதேவா, நசீர், சம்யுக்தா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்ற நடிகை மற்றும் நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்தது படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றுள்ளது. அவர்களின் ஒப்பிடமுடியாத கவர்ச்சி மற்றும் நடிப்பு திறன்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கின்றன. இதை பார்வையாளர்கள் திரையில் காண நான் வெகுவிரைவில் காத்திருக்கிறேன். மஹாராணி காதலுக்கான உழைப்பு"என்று இயக்குநர் சரண் தேஜ் உப்பலாபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் கூறியது:
இது பவேஜா ஸ்டுடியோஸுக்கு ஒரு "சிறப்பு படம்" என்று தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறினார். மேலும் அவர் "எடர்னல் 7 உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் கஜோல், பிரபுதேவா, நசிருதீன் ஷா மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். கஜோலின் திறமையும் நம்பகத்தன்மையும் இந்த கதாபாத்திரத்திற்கு அவரை கச்சிதமாக ஆக்குகின்றன. பவேஜா ஸ்டுடியோஸ், சக்திவாய்ந்த கதைகளைச் சொல்லும் என நாங்கள் நம்புகிறோம். மேலும் இதுபோன்ற ஒரு நட்சத்திரக் குழுவுடன் இந்த படத்தை உயிர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், "என்று கூறினார்.
அதேபோல், "இந்த கதையை நான் படித்தவுடன், இது மக்களை அடைய வேண்டிய ஒரு சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது என்பதை நான் அறிந்தேன். சரண் தேஜ் உப்பலாபதியின் இயக்கத்தின் மீதான கூர்மையான பார்வை மற்றும் எங்கள் நட்சத்திர நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறமை ஆகியவற்றுடன், இந்தக் கதையை பிரகாசிக்க வைக்கும் ஒரு தனித்துவமான பார்வையை நாங்கள் வழங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இ7 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின்கீழ் படம் தயாரிக்கும் வெங்கட அனிஷ் டோரிகில்லு கூறியுள்ளார்.
தொழில்நுட்பக்குழு:
ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர், படத்தொகுப்பாளர் நவீன் நூலி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் சாஹி சுரேஷ் உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் "மஹாராணி" படத்தில் உள்ளனர். திரைக்கதையை நிரஞ்சன் ஐயங்கார் மற்றும் ஜெசிகா குரானா ஆகியோர் சேர்ந்து எழுதியுள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
கஜோலும் பிரபுதேவாவும் முதன்முதலில் 1997ஆம் ஆண்டு "மின்சார கனவு" என்ற தமிழ்த் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இது இந்தியில் "சப்னய்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருந்தார். படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார்.
டாபிக்ஸ்