ஏறி அடித்த தேவரா.. உலகளவில் மாஸ் ஆன வசூல்.. 16 நாட்களில் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
Oct 13, 2024, 04:05 PM IST
ஏறி அடித்த தேவரா.. உலகளவில் மாஸ் ஆன வசூல்.. 16 நாட்களில் தேவரா படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது குறித்துப் பார்ப்போம்.
பான் இந்தியத் திரைப்படமாக வெளியான தேவரா திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்து இருப்பதாக, படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலிகான் நடித்து வெளியான திரைப்படம், ’தேவரா’. உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்துள்ளதாக இன்று (அக்டோபர் 13) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தனி ஹீரோவாக நடித்து ஜூனியர் என்டிஆர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கிய இப்படம் கலவையான பேச்சைப் பெற்றாலும் வசூல் நன்றாகவே இருக்கிறது.
ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் வெளியான ஜூனியர் என்.டி.ஆர். படம்:
கடந்த ஆறுஆண்டுகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனியாக நடித்து வெளியான திரைப்படம், தேவரா. அவர் கடைசியாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணுடன் சேர்ந்து நடித்து இருந்தார்.
தேவரா வெளியீட்டிற்குப் பின், தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க எக்ஸ் (முன்பு ட்விட்டர்) க்கு அழைத்துச் சென்றார், ஜூனியர் என்.டி.ஆர். அதில், "நான் காத்திருந்த அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. உங்கள் நம்பமுடியாத பாஸிட்டிவ் பதில்களால் திக்குமுக்காடிப் போனேன். என் ரசிகர்கள் மூலம் தேவராவுக்கான கொண்டாட்டங்களைப் பார்ப்பது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. உங்கள் அன்புக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் அதை அனுபவித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம், தேவாரா. இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார் . வில்லனாக சைஃப் அலிகான் நடித்துள்ள நிலையில், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், கலையரசன், ஸ்ருதி மராத்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் கொடுத்த பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது. இந்தப் படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தேவரா படம் எத்தகைய கதை கொண்டது?
சைஃப் அலிகான் பைரவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குஷ்தி (மல்யுத்தம்) வாத்தியாரான, அவரது வெல்ல முடியாத உலகம் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரத்தால் தலைகீழாக மாற்றப்படுகிறது. இது வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், படத்தின் முதல்நாளே ரூ.172 கோடியை ஈட்டியது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், தேவரா என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் அப்பகுதி ஆண்களை பல ஆண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கிறார். அவரது மகன் வாரா குடும்ப பாரம்பரியத்தை எவ்வாறு பாதுகாத்து முன்னெடுத்துச்செல்கிறார் என்பதையும் விரிவாகக் காட்டுகிறது.
படத்தைப் பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனத்தின் ஒரு பகுதியில், "தேவரா: பகுதி 1-ன் டிரெய்லர்களை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்திருந்தால், நீங்கள் இதனை கணிக்கக்கூடிய கதை என புரிந்துகொள்ளலாம். படத்தின் முதல் பாதி பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தின் குணங்களையும் செயல்பாடுகளையும் சொல்கிறது. அதன்பின், தேவரா எவ்வாறு கடலின் பாதுகாவலராக வந்தார் என்பதையும் பிற்பகுதி சொல்கிறது. தேவராவுடன் மோதும் அனைவரும் இறப்பதாகக் கூறப்படுகிறது’ என்பதாகும்.