தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Ammer: ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற வீரர்கள்.. அரசிடம் அமீர் வைத்த இரண்டு கோரிக்கைகள்! - முழு விபரம்!

Director Ammer: ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற வீரர்கள்.. அரசிடம் அமீர் வைத்த இரண்டு கோரிக்கைகள்! - முழு விபரம்!

Jan 18, 2024, 08:15 AM IST

google News
ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

தமிழக அரசு பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, அரசு பணி ஒதுக்கிட  தமிழக முதல்வருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இயக்குனர் அமீர் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஆகியோரது கனிவான கவனத்திற்கு..

வணக்கம்,

திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக,

“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்

புல்லாளே ஆய மகள்..”

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

முன்னதாக, பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. 

அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அபிசித்தர் இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் மூர்த்தி ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ அபிசித்தர் ஜல்லிக்கட்டு போட்டியை 6.30 வரை நீட்டித்தது தவறு. நான் தான் முதலிடம் பிடித்தேன். 

அமைச்சர் மூர்த்தி மற்றும் குழுவினர் குளறுபடி செய்து கார்த்திக்கு பரிசை வாங்கிகொடுத்து விட்டனர். ஆகையால் நான் நீதிமன்றம் சென்று அமைச்சர் மீது புகாரளிக்கப்போகிறேன்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது. 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி