தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  54 Years Of Maanavan: கொள்ளை அழகு..! இளைஞனாக கமல் தோன்றிய முதல் படம் - படிப்பின் முக்கியத்துவத்தை உரக்க சொன்ன மாணவன்

54 Years of Maanavan: கொள்ளை அழகு..! இளைஞனாக கமல் தோன்றிய முதல் படம் - படிப்பின் முக்கியத்துவத்தை உரக்க சொன்ன மாணவன்

Jul 10, 2024, 05:30 AM IST

google News
கொள்ளை அழகுடன், இளைஞனாக கமல் தோன்றிய முதல் படம் மாணவன். படிப்பின் முக்கியத்துவத்தை உரக்க சொன்ன தமிழ் சினிமாவின் சமூக அக்கறை கொண்ட படமாக உள்ளது.
கொள்ளை அழகுடன், இளைஞனாக கமல் தோன்றிய முதல் படம் மாணவன். படிப்பின் முக்கியத்துவத்தை உரக்க சொன்ன தமிழ் சினிமாவின் சமூக அக்கறை கொண்ட படமாக உள்ளது.

கொள்ளை அழகுடன், இளைஞனாக கமல் தோன்றிய முதல் படம் மாணவன். படிப்பின் முக்கியத்துவத்தை உரக்க சொன்ன தமிழ் சினிமாவின் சமூக அக்கறை கொண்ட படமாக உள்ளது.

கல்வியின் மகத்துவத்தையும், படிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்லும் விதமாக தமிழில் ஏராளமான படங்கள் உள்ளன. அதிலும் 1960-70 காலகட்டத்தில் நாட்டின் எதிர்காலமே படிக்கும் மாணவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உரக்க சொன்ன சமூக அக்கறை கொண்ட படம் தான் மாணவன்.

வெள்ளிகிழமை நாயகன் என்ற அழைக்கப்பட்ட ஜெய்ஷங்கர் கதையின் நாயகனாகவும், ஆர். முத்துராமன் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவரும் ஹீரோக்கள் தான் என்றாலும் முத்துராமன் இந்த படத்தில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

லட்சுமி கதையின் நாயகியாகவும், ஜெய்ஷங்கர் காதலியாகவும் நடித்திருப்பார். நாகேஷ், எஸ்.ஏ. அசோகன், ஓ.எ.கே. தேவர், செளகார் ஜானகி, மேஜர் சுந்தரராஜன், வி.எஸ். ராகவன், தேங்காய் சீனிவாசன், சச்சு உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடியன்களாக கலக்கிய காத்தாடி ராமமூர்த்தி, பாண்டு ஆகியோருக்கு இதுதான் அறிமுக படமாகும். பாலமுருகன் கதை, திரைக்கதை எழுத, சாண்டோவ் சின்னப்ப தேவர் தயாரிப்பில், எம்.ஏ. திருமுருகன் படத்தை இயக்கியிருப்பார்.

படிப்பால் உயரும் மாணவன்

ஜெய்ஷங்கரின் தந்தையான அசோகன் சூதாட்ட வழக்கில் சிறை செல்கிறார். நன்றாக படிக்கும் மாணவனாக இருந்து வரும் ஜெய்ஷங்கர், அவரது தாயார் செளகார் ஜானகியை ஊரை விட்டு துறத்துகிறார் பஞ்சாயத்து தலைவரான ஓ.எ.கே. தேவர்.

நகரத்துக்கு குடிபெயர்ந்து வேலை பார்த்தவாறே பணம் சம்பாதித்து படிக்கவும் செய்கிறார் ஜெய்ஷங்கர். அவர் படிக்கும் அதே கல்லூரியில் பஞ்சாயத்து தலைவர் ஓ.ஏ.கே. தேவர் மகனான முத்துராமன் படிக்கிறார். ஜெய்ஷங்கர் - முத்துராமன் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்படுகிறது.

சக மாணவனை கொலை செய்து ஜெய்ஷங்கர் மீது பழி போட நினைக்கும் முத்துராமன் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு சிறை செல்கிறார். நன்கு படித்து ஆட்சியராகும் ஜெய்ஷங்கர் சிறையில் வைத்து முத்துராமனை சந்திக்கிறார்.

மணவர்கள் நன்கு படித்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி நன்மையை தருவதாக இருக்கும் என்பதை எடுத்து கூறும் விதமாக படத்தை முடித்திருப்பார்கள்.

ஜெய்ஷங்கர் கல்லூரியில் படிக்கும் போது லட்சுமியிடன் முதலில் மோதல், பின்னர் காதல் என ரெமான்ஸுக்கான தனி டிராக்கும் உண்டும். அதேபோல் ரிக்ச‌ஷாகாரனாக வரும் நாகேஷ் காமெடியின் அதகளம் செய்யும் டிராக்கும் ரசிக்கும் விதமாக இருக்கும்.

இளைஞனாக கமல் தோன்றிய படம்

களத்தூர் கண்ணம்மா படத்தில் 4 வயது சிறுவனாக நடித்தது தான் கமல்ஹானின் அறிமுக படம் என அனைவருக்கும் தெரியும். சிறுவனாக சில படங்களில் நடித்த கமல்ஹாசன், 7 வருட இடைவெளிக்கு பிறகு இளைஞனாக சினிமாவில் முதன் முதலில் தோன்றியது இந்த படத்தில் தான், குட்டி பத்மினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி அப்போதையே பெண் ரசிகைகள் தனது அழகால் கொள்ளை கொண்டிருப்பார்.

சங்கர்-கணேஷ் இசை

திருச்சி தியாகராஜன், வாலி, மாரியப்பா ஆகியோர் பாடல்கள் எழுத சங்கர்- கணேஷ் இசையில் பாடல்கள் அனைத்து வரவேற்பை பெற்றன. சின்ன சின்ன பாப்பா என்ற பாடலும் அப்போது ஹிட்டானது. அதேபோல் விசில் அடிச்சான் குஞ்சுகளா என்ற பாடலில் தான் கமல் - குட்டி பத்மினி இணைந்து மாணவர்களாக நடனமாடியிருப்பார்கள்.

நல்ல வரவேற்பு

படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் விதமாக அமைந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடின. முத்துராமன் கதாபாத்திரம் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. தமிழில் வெளியான சிறந்த சமூக சிந்தனை மிக்க படங்களில் ஒன்றாக இருந்து வரும் மாணவன் வெளியாகி இன்றுடன் 54 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி