Vijay Antony: ‘செத்துட்டார்ன்னு நினைச்சேன்’ - பிச்சைக்காரன் 2 பட மேடையில் அழுத விஜய் ஆண்டனி மனைவி!
May 16, 2023, 07:09 AM IST
அதுக்கப்புறம் நடந்தது எல்லாமே உங்களுக்குத் தெரியும். இது நிச்சயமா ஆண்டவனுடைய செயல்; அப்புறம் உங்களுடைய ஆசீர்வாதம். விஜய் ஆண்டனி மிகவும் மதம் சார்ந்த மனிதரோ அல்லது ஆன்மீகம் சார்ந்த மனிதரோ இல்ல.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிரபலமான விஜய் ஆண்டனி சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதனையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். மக்களிடம் அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து, ‘சலீம்’ ‘இந்தியா பாகிஸ்தான்’ ‘ ‘பிச்சைக்காரன்’ ‘சைத்தான்’ ‘அண்ணாதுரை’ ‘காளி’ ‘கொலைகாரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இயக்குநர் சசிக்குமார் இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன். அனைத்துதரப்பு மக்களிடமும் விஜய் ஆண்டனியை கொண்டு சேர்த்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாவும், அந்தப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார் விஜய் ஆண்டனி.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனியை படக்குழு சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவர் இங்கு சிகிச்சைப் பெற்று குணமானார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய விஜய் ஆண்டனியின் மனைவியான ஃபாத்திமா, “ இப்போ சிரிச்சிட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி இறைவனுக்கு நன்றி. கோடி கோடி நன்றி இறைவனுக்கு. என் படத்தைப் பற்றி பேசுறதுக்கு எனக்கு பெரிசா இஷ்டம் இல்ல. தை பொங்கல் அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்.. டீ குடிச்சிட்டு இருக்கும் போது மலேசியா படப்பிடிப்பு தளத்துல இருந்து ஒரு போன் கால். விஜயோட அசிஸ்டெண்ட்ட சாருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு மேடம். சுயநினைவு இழந்து தண்ணிக்குள்ள மூழ்கிட்டாருன்னு சொன்னார்.
அதோடு அவன் போன கட் பண்ணிட்டான். எல்லா முடிஞ்சதுன்னு நினைச்சேன். ஆனா பத்திரிகையாளர்கள் எல்லாரும் எனக்கு பாசிட்டிவான கமெண்டுகள் சொல்லி தேத்துனாங்க. மலேசியாவுல இருந்து அவர் இங்க வர்றதுக்குள்ள நமக்கு இவ்வளவு பேர் இருக்காங்க எனக்கு தோனுச்சு.
அதுக்கப்புறம் நடந்தது எல்லாமே உங்களுக்குத் தெரியும். இது நிச்சயமா ஆண்டவனுடைய செயல்; அப்புறம் உங்களுடைய ஆசீர்வாதம். விஜய் ஆண்டனி மிகவும் மதம் சார்ந்த மனிதரோ அல்லது ஆன்மீகம் சார்ந்த மனிதரோ இல்ல. ஆனால் வாழ்க்கையில் நல்ல விதிமுறைகளை பின்பற்றும் ஒரு மனிதர்ன்னு நான் சொல்லுவேன். அவரை கல்யாணம் செய்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடையுறேன். அதுக்கும் மேல அவருக்கு எல்லா விதத்துலையும் சப்போர்ட்டா இருக்குறது சந்தோஷமா இருக்கு.” என்று பேசினார்.
டாபிக்ஸ்